உதயநிதியை செயல் தலைவராக்கக்கூடாது: முட்டுக்கட்டை போடும் திமுக நிர்வாகிகள்

- நமது நிருபர் -

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு, தி.மு.க., செயல் தலைவர் பதவி வழங்க, கட்சியின் மூத்த நிர்வாகிகள் முட்டுக்கட்டை போடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து, கட்சியின் கள ஆய்வுக் குழு நடத்திய விசாரணை அறிக்கையிலும், மறுசீரமைப்புக் குழு அளித்த பரிந்துரையிலும், கட்சியின் மூத்த மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் மீது, பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

மேலும், 'உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும்; கட்சி நிர்வாகத்தை கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை மாற்றி அமைக்க வேண்டும்' என, அந்த அறிக்கைகளில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மூத்த மாவட்டச் செயலர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளை மாற்றி விட்டு, இளைஞர்களுக்கு முக்கிய பதவிகள் அளிக்க, உதயநிதி தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தி.மு.க.,வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், த.வெ.க., மற்றும் அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பால் எழும் சவால்களை எதிர்கொள்ளவும், தி.மு.க.,வில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என, உதயநிதி தரப்பினர் கருதுகின்றனர்.

எனவே, கடந்த தி.மு.க., ஆட்சியில் துணை முதல்வராகவும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் உதயநிதியை, தி.மு.க.,வின் அடுத்த தலைவராக முன்னிலைப்படுத்த, அவருக்கு செயல் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும், அவரது ஆதரவாளர்கள் தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி வழங்க, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் விரும்பவில்லை. தி.மு.க., தலைவராக கருணாநிதி இருந்தபோது, அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட பின்னரே, செயல் தலைவர் பதவியில், ஸ்டாலின் அமர்த்தப்பட்டார்.

தற்போது, 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், எதற்காக தி.மு.க.,வில் செயல் தலைவர் பதவியை ஏற்படுத்த வேண்டும்?' என, மூத்த நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இப்போது இருப்பது போல், ஸ்டாலின் தலைமையில் கட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதில், மூத்த நிர்வாகிகள் உறுதியாக இருக்கின்றனர். இதனால், உதயநிதியை தி.மு.க., செயல் தலைவராக்கும் முயற்சியில் முட்டுக்கட்டை விழுந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement