விசிக மறியலில் வழி கேட்ட வாலிபர் எஸ்.ஐ.,க்கு 'பளார்' விட்டதால் பரபரப்பு

47

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், வி.சி.க.,வினர் மறியலில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்து வழிகேட்ட வாலிபர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, எஸ்.ஐ., கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர், ரயில்வே ஸ்டேஷன் முன், வி.சி.க., சார்பில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் நேற்று நடந்த அக்கட்சி மாநாடு தொடர்பான பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த இந்த பேனரை, மாநகராட்சி அலுவலர்கள் நேற்று அகற்றினர்.

மாநகராட்சி கமிஷனர் ஜாதி ரீதியாக செயல்படுவதாகவும், திருமாவளவன் பேனரை மட்டுமே அகற்ற கூறியுள்ளதாகவும் கூறி, மாநகராட்சி அலுவலகம் எதிரே அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

மறியல் நடந்து கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஏராளமான பொதுமக்கள், வழி கேட்டு வி.சி.க.,வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல, வாலிபர் ஒருவர் வழி கேட்டு, வி.சி.க.,வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, சமாதானப்படுத்த வந்த போலீசாரிடம், அந்த வாலி பர், 'நான் வேலைக்கு செல்ல வேண்டும். என் சம்பளத்தை யார் தரு வாங்க' எனக்கேட்டு, வாக்குவாதம் செய்தார். போலீசார் அந்த வாலிபரை, பொறுமையாக இருக்குமாறு கூறியும், அவர் வாக்குவாதம் செய்ததால், ஒரு கட்டத்தில், போலீசா ருக்கும், வாலிபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, வாலிபரை, எஸ்.ஐ, அப்துல் ரஹீம், 55, கன்னத்தில் அறைய, பதிலுக்கு அப்துல் ரஹீமை கன்னத்தில், வாலிபர் ஓங்கி அறைந்தார்.

இதில், நிலைகுலைந்த அப்துல் ரஹீம் மற்றும் போலீசார், அந்த வா லிபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர், தஞ்சாவூர், விளார் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ், 26, என, தெரிந்தது. ஆகாஷை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, அகற்றப்பட்ட விதிமீறல் பேனர் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்ட பின்னரே, வி.சி.க.,வினர் கலைந்து சென்றனர்.

போலீசாரை ஆகாஷ் தாக்கியபோது, அவருக்கு பின்னால் பைக்கில் நின்றிருந்த திருக்கானுார்பட்டியை சேர்ந்த அய்யப் பன், 27, என்பவர், போலீசாரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். அவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

Advertisement