பறவைகள் சரணாலயம் அருகே கல்குவாரிக்கு அனுமதி கிராம மக்கள் எதிர்ப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அருகே கல்குவாரி செயல்பட அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அருகே பாப்பாங்குளம் பகுதியில் முறையான அனுமதியின்றி கல்குவாரி செயல்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இரவில் வெடி வைப்பதால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த 11 கிராம மக்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், ராம்சார் குளம் ஆகியவை கல்குவாரியில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இதன்மூலம் சரணாலயத்தை சுற்றி 10 கி.மீ., தொலைவுக்குள் கல்குவாரி அமைக்கக் கூடாது என்ற விதி மீறப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களின் அனுமதி பெறாமல், பிற பஞ்சாயத்து முகவரிகளை பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் கல்குவாரி செயல்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கல்குவாரிக்கு எதிராக 2025, 2026ம் ஆண்டுகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் திடீரென அனுமதி வழங்கப்பட்டது எப்படி எனவும் கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.

எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து கல்குவாரியை மூடி சீல் வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement