கேரளாவில் தொடர் திருட்டு: இரு பெண்கள் கைது

1

பந்தலுார்: கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், கூட்டம் நெரிசலாக உள்ள பஸ்கள், பெரிய வியாபார நிறுவனங்கள், கோவில் திருவிழாக்கள் போன்ற இடங்களில், வயது முதிர்ந்த மற்றும் குழந்தைகள் அணிந்திருந்த நகைகள் தொடர்ச்சியாக, திருடப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த ஆடி அமாவாசை நாளின் போது, வயநாடு திருநெல்லி என்று இடத்தில், தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்த நிலையில், ஐந்துக்கும் மேற்பட்டோர் ஆபரணங்கள் காணாமல் போயிருந்தது.

தொடர்ந்து, அம்பலவயல் மற்றும் சுல்தான் பத்தேரி உள்ளிட்ட பகுதிகளில், பஸ்கள் மற்றும் கடைகளில் நின்றிருந்த சில முதியோரின் கழுத்தில் அணிந்து இருந்த ஆபரணங்கள் காணாமல் போனது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ‘சிசிடிவி’ காட்சிகளில் இரண்டு பெண்கள், திருட்டு சம்பவங்கள் நடந்த பகுதிகளில் இருந்தது தெரிய வந்தது. இவர்களின் புகைப்படங்களை வெளியிட்ட வயநாடு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீனங்காடி என்ற இடத்தில் போலீசார், இரு பெண்களை பிடித்து விசாரணை செய்ததில், இவர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு அவர்கள் என்பது தெரிய வந்தது.

அதன்பின், எஸ்.பி., கார்த்திக் தலைமையில் விசாரணை மேற்கொண்டதில், ‘அந்த பெண்கள், ‘மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கண்ணகி,30, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஈஸ்வரி,47, என்பது தெரிய வந்தது. இவர்கள் ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் போது தங்கள் பெயர்களை மாற்றி கூறி அறை எடுத்து தங்குவது, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல தொடர்ச்சியாக ஆட்டோக்களை பயன்படுத்தி வந்தனர். மேலும், கேரளா மற்றும் தமிழகத்தில், இருவர் மீதும், 100க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவை உள்ளதாகவும், இவர்கள் தேடப்படும் குற்றவாளிகள்,’ என, தெரிய வந்தது.

Advertisement