ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறு: தினந்தோறும் நடக்கிறது தகராறு

கோவை: மாவட்டத்தில் 1,401 ரேஷன் கடைகள் மூலம் 4.18 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொருட்கள் வழங்கும் முன் பி.ஓ.எஸ்., கருவியில் பதிவு செய்து, ஆதார் சரிபார்க்கப்படுகிறது.

ஒரு வாரமாக சர்வர் பிரச்னை இருந்து வருகிறது. நேற்று காலை 11:00 முதல் 11:50 மணி வரை பல கடைகளில் விற்பனை முனைய கருவி(பி.ஓ.எஸ்.,) செயல்படவில்லை.

புலியகுளம், பி.என்.புதுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் இதே பிரச்னை ஏற்பட்டது.

ரேஷன் கடை பணியாளர் ஒருவர் கூறுகையில், 'இம்மாத துவக்கத்தில் இருந்தே சர்வர் பிரச்னை உள்ளது. கருவியில் பதிவு செய்யும்போது, இணைப்பு ஏற்படுத்த முடியவில்லை, 'மீண்டும் முயற்சிக்கவும்' என தகவல் வருகிறது.

தாலுகா அளவில் உள்ள பொறியாளர்களிடம் கேட்டால், தலைமை அலுவலகத்தில் விசாரிக்கும்படி கூறுகின்றனர். அங்கு கேட்டால் சென்னையில் பிரச்னை என்கின்றனர்.

சர்வர் கோளாறை சரி செய்யாததால் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது' என்றார்.

Advertisement