திண்டுக்கல் திருச்சி இடையே ரயில் பாதையில் பாதுகாப்பு வேலி

வடமதுரை:திண்டுக்கல் திருச்சி இடையே ரயில் பாதைக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நடக்கிறது.

ரயில் பாதைகளுக்குள் கால்நடைகள் வருவது உள்ளிட்ட பிரச்னைகளை தடுக்கவும், ரயில் போக்குவரத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் தண்டவாளப்பாதை, ரயில்வே நிலங்களையொட்டி சுவர், ஸ்டீல் உலோகம் பயன்படுத்தி பாதுகாப்பு வேலி அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக முக்கிய போக்குவரத்து தடங்களான இருவழிப்பாதைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

இவ்வகையில் நடப்பாண்டில் திருச்சியில் இருந்து மணப்பாறை வரை 67.52 கி.மீ., க்கு ரூ.42.99 கோடி, மணப்பாறை முதல் அய்யலுார் வரை 59.16 கி.மீ.,க்கு ரூ.37.29 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலுார் பகுதியில் இப்பணி மும்முரமாக நடக்கிறது.

இதேபோல் அய்யலுார் முதல் அம்பாத்துரை வரை 69.80 கி.மீ.,க்கு ரூ.42.52 கோடி, அம்பாத்துரை முதல் சமயநல்லுார் வரை 53.75 கி.மீ.,க்கு ரூ.44.21 கோடி, சமயநல்லுார் முதல் மதுரை வரை 23.76 கி.மீ.,க்கு ரூ.17.89 கோடியில் பாதுகாப்பு வேலி அமைகிறது.

Advertisement