நிர்வாக செலவுகள் அதிகரிப்பு எதிரொலி; ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்கும் ஹிமாச்சல்

8

சிம்லா: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் ஆகிய அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க ஹிமாச்சல பிரதேச அரசு திட்டமிட்டு உள்ளது.

நிர்வாக ரீதியான செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுக்கலாம் என்று மாநில அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறி உள்ளதாவது;

மாநிலத்தில் தற்போது 153 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் பலர் நிபுணத்துவம் பெற்றவர்கள். இருப்பினும் அவர்களை முழுமையாக பயன்படுத்த முடியாதபடி சிறிய துறைகளில் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். எனவே ஐஏஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கையை 153ல் இருந்து 130 ஆக குறைக்க அரசு முயற்சித்து வருகிறது.

மாநிலத்தில் தேவைப்படும் ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளை விட அதிகம் பேர் இருக்கின்றனர். ஐபிஎஸ் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகிறோம். ஐஎப்எஸ் பணியாளர் எண்ணிக்கையானது ஏற்கனவே இருந்த 117ல் இருந்து 83 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. பணியாளர் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் அரசின் வருவாய் செலவில் ரூ.150 கோடி வரை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.

ஐஏஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 100 முதல 110 வரை இருக்க வேண்டும். 23 அதிகாரிகளை மட்டுமே குறைக்க கோருகிறோம். அரசின் திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றை செயல்படுத்தும் அதிகாரிகளே எங்களுக்கு அவசியம். அதிகாரிகள் மத்திய பணிக்கு மாற விரும்புவதை எங்கள் அரசு அனுமதிக்கும். அவர்கள் உடனடியாக பதவி விலகவும் அனுமதி அளிக்கப்படும்.

ஊதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல சலுகைகள் உள்பட ஒவ்வொரு அதிகாரிக்கும் செலவிடப்படும் தொகை ரூ.50 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement