ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட சாலை அச்சத்தோடு பயணிக்கும் மக்கள் 

விழுப்புரம்: விழுப்புரத்தில், தேர்தலுக்கு முன் கொட்டப்பட்ட ஜல்லிகள் சாலை போடாததால் சிதறி வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது.

விழுப்புரம் நகராட்சி, 38 வது வார்டுக்கு உட்பட்ட வள்ளலார் நகரில், முதல் தெரு, இரண்டாவது தெரு, மூன்றாவது தெரு மற்றும் குறுக்கு தெருக்கள் உள்ளன.

இந்த தெருக்களில் முருகன் கோவில் வீதி, என்.ஜி.ஜி.ஓ., நகர் செல்லும் மெயின் ரோடு உட்பட பல்வேறு வீதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இவர்கள் தினந்தோறும் பயன்படுத்தும் சாலை மிகவும் மோசமாகவும், பள்ளம் நிறைந்தும் காணப்பட்டது.

மழை காலங்களில் பள்ளங்களை தண்ணீர் சூழ்ந்திருந்ததால் வாகன ஓட்டிகள் தெரியாமல் அதில் சிக்கி விபத்துக்குள்ளாகும் சூழலும் ஏற்பட்டது.

இதையொட்டி, கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், நகராட்சி நிர்வாகம் மூலம் புதிய சாலை போடுவதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. அத்தோடு, அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டு, தற்போது வரை ஜல்லி கற்களோடு காட்சியளிக்கிறது.

இந்த ஜல்லியில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். கிடப்பில் போடப்பட்ட சாலையை முற்றிலுமாக தார் சாலையாக மாற்ற, நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Advertisement