விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்ற வழக்கு: நிராகரித்தது உச்சநீதிமன்றம்
புதுடில்லி: தற்போது தூக்கில் போட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு மாற்றாக விஷ ஊசி போட்டு அல்லது துப்பாக்கியால் சுடும் முறையை பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: தூக்கு தண்டனைக்கு மாற்றாக சில நிமிடங்களிலேயே குற்றவாளிக்கு மரணத்தை ஏற்படுத்தும் விஷ ஊசி, துப்பாக்கியால் சுட்டு, மின்சாரம் பாய்ச்சி அல்லது விஷவாயு போன்ற மாற்று வழிகள் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
தூக்கு தண்டனை மிகவும் வேதனையானது. மனிதாபிமானமற்றது. கொடூரமானது. குற்றவியல் நடைமுறை சட்டம் 345(5)ன் கீழ் தூக்கில் போட்டு மரண தண்டனை நிறைவேற்றுவது அரசியல் அமைப்புக்கு முரணானது. கண்ணியமான மரணத்திற்கான உரிமை அரசியல் அமைப்பின் 21வது பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தூக்கில் போட்ட பிறகு, மரணத்தை அறிவிக்க கிட்டதட்ட 40 நிமிடங்ள் ஆகிறது.
அதே சமயம் துப்பாக்கியால் சுடுதல் அல்லது விஷ ஊசி வாயிலாக இந்த செயல்முறை சுமார் 5 நிமிடங்களில் நிறைவு பெற்று விடும் எனத் தெரிவித்து இருந்தார். மேலும் மரண தண்டனை விதிக்கப்படும் இடங்களில் அது முடிந்த வரை குறைந்தபட்ச துன்பத்தை ஏற்படுத்தும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்ததுடன், தூக்கில் போடுவது வாயிலாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் அரசியல் அமைப்பு சட்டம் கூறியதை நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முந்தைய மூன்று தீர்ப்புகளை மீண்டும், விசாரிக்க பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
மேலும் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளதாவது: இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான மாற்று முறைகளை குறித்து வலுவான அறிவியல் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டால் எதிர்காலத்தில் இந்த விவகாரம் மீண்டும் பரிசீலனை செய்யலாம்.
அறிவியல், மருத்துவம் அல்லது அனுபவப்பூர்வமான சான்றுகள் கிடைத்தால், தற்போதைய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்கால ஆய்வை தடுப்பதாக நினைக்கக்கூடாது.
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான மாற்று முறைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்கு மத்திய அரசு விரும்பினால் குழு அமைக்கலாம் எனக் கூறியுள்ளனர்.