'உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும்' அப்பல்லோவில் புது திட்டம் தொடக்கம்

புதுடில்லி: அப்பல்லோ மருத்துவ குழும மருத்துவமனைகள், ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட வாரத்தின் ஏழு நாட்களும் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட உயரிய மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில், 'எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக' என்ற புதிய திட்டத்தை நேற்று தொடங்கியது.

டில்லியில் இத்திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து, அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி பேசியதாவது:

மருத்துவ துறையில், 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன். வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவது குறைந்து, இந்தியாவிலேயே அனைத்து விதமான சிகிச்சைகளையும் பெறுவது அதிகரித்துஉள்ளது.

தங்கள் உடல்நலனில் மக்கள் அக்கறை செலுத்த வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவமனை செயல்படுவதை சேவையாக செய்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்பல்லோ மருத்துவ குழும துணை தலைவர் பிரீத்தா ரெட்டி பேசியதாவது:

அப்பல்லோ மருத்துவ மனையின் அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சை, உள்நோயாளி சேவைகள் ஆகியவை, 24 மணி நேரமும் செயல்படுகின்றன.

தற்போது, ஞாயிற்றுக்கிழமைகளிலும், புறநோயாளிகள் பிரிவு, பரிசோதனைகள், அறுவை சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.

நோய்களுக்கு எப்போதும் விடுமுறை இல்லை என்பதால், இவற்றை சேவையாக நாம் செய்கிறோம்.

எங்கள் மருத்துவமனைகளில் நோயை துல்லியமாக கண்டறிய, செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொழில்நுட்பங்கள் உள்ளன.

மேலும், டாக்டர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்காதவாறு திட்டமிட்டு, அனைத்து நாட்களும் மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement