'லார் கிப்பன்' குரங்கு உட்பட 11 விலங்குகள் பறிமுதல்

சென்னை : 'உரிய அனுமதி இல்லாமல், தனியார் வைத்திருந்த, இரண்டு, 'லார் கிப்பன்' குரங்கு உட்பட, 11 அரிய வகை விலங்குகளை, வனத் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

நடிகர் விக்ரம், லார் கிப்பன் வகை குரங்குடன் விளையாடுவது போன்ற வீடியோ, கடந்த வாரம் சமூக வலைதளத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில், நடிகர் விக்ரமின் உறவினர் ரங்கநாதன் வீட்டில், அந்த குரங்குகள் இருப்பதாக தகவல் வெளியானது.

இது குறித்து விசாரிக்க, வனத்துறையினர் அங்கு சென்றபோது, அங்கிருந்த லார் கிப்பன் குரங்குகள், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், தொழில் அதிபர் கேசவநாதனின் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த விலங்குகள், மணிப்பூரை சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாங்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, ஈரோடு மாவட்ட வன அலுவலர் குமிளி வெங்கட அப்பல நாயுடு தலைமையில், வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அங்குள்ள அரிய வகை விலங்குகள் தொடர்பான ஆவணங்கள், அதை வைத்திருந்தவரிடம் இல்லாதது தெரியவந்தது. இது தொடர்பாக, வனத்துறையினர் கேசவநாதன் மீது, இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த விசாரணைக்கு, அவர் ஒத்துழைப்பு கொடுக்காத நிலையில், அவரது பண்ணை வீட்டில் இருந்த, அரிய வகை விலங்குகளை, வனத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

இரண்டு 'லார் கிப்பன்' குரங்குகள், ஏழு 'செர்வால் கேட்' என்கிற நெடுங்கால் பூனைகள், இரண்டு 'டப்டெட் கேப்புசின்' எனப்படும் அடற்சுருட்டை வால் குரங்கு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விலங்குகள், சென்னை வண்டலுார் உயிரியல் பூங்கா அல்லது அங்குள்ள மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement