சீமை கருவேல மரங்களை அகற்ற மக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, சாந்தப்பாடி செல்லாண்டியம்மன் அணையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சாந்தப்பாடி பகுதியில் செல்லாண்டியம்மன் அணை அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்வணையில், ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி, சுற்றியுள்ள பகுதிகளில் கிணற்றில் நீர்மட்டம் உயர்ந்து, விவசாயிகளுக்கு பெரும் பயனளித்து
வருகிறது. ஆனால், அணையை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக பரவி உள்ள சீமை கருவேல மரங்கள் காரணமாக, அங்கு நரி போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வருவதாகக் கூறப்படுகிறது. இதன் தாக்கத்தால், அருகிலுள்ள பகுதிகளில் ஆடு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
நரிகள், கருவேல மரங்களின் அடர்ந்த பகுதிகளில் தஞ்சமடைந்து, அருகிலுள்ள ஆடுகளை தாக்குவதால், விவசாயிகள் ஆடு வளர்க்க தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, செல்லாண்டியம்மன் அணையை சுற்றியுள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement