மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு

2


ராஞ்சி: தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியிட்டது.

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜே.எஸ்.எஸ்.சி., நடத்திய ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தலைநகர் ராஞ்சியில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மேலும், ஜே.பி.எஸ்.சி., எனப்படும், ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணி முதல்நிலை தேர்வை ரத்து செய்யக் கோரிய மாணவர்கள், இந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்கவும் வலியுறுத்தினர்.

போராட்டத்துக்கு ஆதரவாக, கடந்த 1 முதல், மாணவர் அமைப்பு தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அரசு பேச்சு நடத்தியும், போராட்டத்தை மாணவர்கள் கைவிடவில்லை. போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்ததை அடுத்து, ஜே.எஸ்.எஸ்.சி., நடத்திய ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வை ரத்து செய்வதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்தது.

அத்தேர்வில் வெற்றி வெற்ற, 2,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதிக்கப் போவதாக எச்சரித்து இருப்பது அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது முறைகேடுகள் குறித்த புகார்கள் மற்றும் அது தொடர்பான சிஐடி அல்லது எஸ்ஐடி விசாரணைகளைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்பட்ட 44 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அம்மாநில அரசு பின்வரும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

* JPSC/JSSC தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, ஒரு விரைவு நீதிமன்றத்தை அமைக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்படும்.

* 'உள் கண்காணிப்புப் பிரிவு அமைக்கப்படும். தேர்வு முறைகளைச் சீர்திருத்துவது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள, ஐஏஎஸ் அதிகாரி அமிதாப் கவுஷல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும்.

* இக்குழுவில் பிற அதிகாரிகளுடன், ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தின் இயக்குநரும் உறுப்பினராக இடம்பெறுவார். இக்குழு தனது அறிக்கையை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்கும் என ஜார்க்கண்ட் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement