கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோல்கட்டாவின் மிர்ஷா காலிப் வீதியில் அமைந்துள்ள இந்த தங்கும் விடுதியில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வந்துள்ள வங்கதேசத்தைச் சேர்ந்தவர் உள்பட ஏராளமானோர் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று நள்ளிரவு 2 மணியளவில் அந்த விடுதியின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியது.
இதையடுத்து, இந்த தீவிபத்து குறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
நள்ளிரவு நேரம் என்பதால், விடுதியில் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அறையில் இருந்து குளிர்சாதன பெட்டி வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தீவிபத்தை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விடுதி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்று அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்பு பிர்பும் மாவட்டத்தில் உள்ள விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement