சொல்கிறார்கள் ––––––––––––––––––– ‘குடும்பம், குறிக்கோள் இரண்டும் பெண்களுக்கு முக்கியம்!’ –––––––––––––––––––



புகைப்பட கலைஞராக அசத்தும், தஞ்சையைச் சேர்ந்த, 50 வயதாகும் ரமா:

என் அண்ணனிடம் தான் புகைப்பட தொழிலை கற்றுக் கொண்டேன். அண்ணனின் நண்பரையே எனக்கு திருமணம் செய்து வைத்தனர்; அவரும் புகைப்பட கலைஞர் தான்.

எனக்கும் புகைப்படத் துறையில் ஆர்வம் உள்ளதாக கணவரிடம் தெரிவித்தேன். அவர், அது குறித்து கூடுதலாக கற்றுக் கொடுத்து, அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து செல்ல ஆரம்பித்தார். ஆரம்பத்தில், ஆயிரம் விமர்சனங்கள் வந்தன. ஆனால் கணவரோ, ‘உனக்கு பிடித்ததை செய்’ என ஊக்கமளித்தார்.

தற்போது நான், கணவர், மகன் அனைவரும் சேர்ந்து புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுக்கும் தொழில் செய்து வருகிறோம். முதலில் பயிற்சிக்காக சிறிய நிகழ்ச்சிகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். அதன்பின் தனியாகவே என் பயணத்தை துவக்கினேன். புடவை கட்டி, கழுத்தில் கேமராவை மாட்டியபடி சுற்றிய என்னை, அனைவரும் வித்தியாசமாக பார்ப்பர். ஆனால், அது எனக்கு வானில் பறக்கும் உணர்வை கொடுத்தது.

இரவு நிகழ்ச்சிகள், வெளியூர் பயணங்கள், கனமான உபகரணங்கள் என, இத்தொழிலில் பல சவால்கள் இருந்தன; அனைத்தையும் கடந்து முன்னேறினேன்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே, ஆளில்லா பறக்கும் சிறிய ரக விமானமான, ‘ட்ரோனில்’ கேமரா பொருத்தி புகைப்படங்கள், காணொளிகள் எடுக்க ஆரம்பித்தேன். அப்போது, தஞ்சாவூரில் ஒரு திருட்டு நடந்தது. போலீசார் மிகவும் தீவிரமாக திருடனை தேடிக் கொண்டிருந்தனர். நான் ட்ரோனை பறக்க விட்டு, திருடன் இருக்கும் இடத்தை போலீசாருக்கு கூறினேன்.

என் மருமகள், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்து வருகிறார். ஒருநாள் அவருக்கு குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாதபடி கடும் பணி நெருக்கடி இருந்ததால், என்னிடம் பேரனை கொடுத்துவிட்டு சென்றார்.

அன்று எனக்கு ஒரு திருமண நிகழ்ச்சி இருந்தது. ஒரு கையில் கேமராவும், குழந்தையை சுமக்கும் பையில் என் பேரனையும் வைத்தபடி, திருமணத்தில் புகைப்படம் எடுக்கும் வேலையை செய்தேன். அந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் காணொளியாக வெளியாகி மிகவும் பிரபலமானது.

குடும்ப சூழல் காரணமாக, இன்றும் பல பெண்கள் மார்பிலும், தலையிலும், இடுப்பிலும் குழந்தைகளை சுமந்தபடி வேலை பார்த்து வருகின்றனர். ஒரு பெண்ணுக்கு குடும்பமும், அவளது கனவும் மிக முக்கியம். இரண்டையும் சமநிலையுடன் கொண்டு செல்ல வேண்டும். என் பேரனை சுமந்த மாதிரி தான், 30 ஆண்டுகளாக என் கனவையும் சுமந்து வருகிறேன். நமக்காக நாம் தான் நிற்க வேண்டும்.

***

Advertisement