தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சோதனை

5


சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சிக்காலத்தில் 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவரின் பதவிக் காலத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்தது தொடர்பாக ரூ.397 கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதாவது, மின்மாற்றிகளை வாங்கியதில் கூட்டுச் சதி மற்றும் சந்தை விலையை விட அதிக விலைக்கு டெண்டர் விடப்பட்டதன் மூலம் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டது என்பதே குற்றச்சாட்டாகும். இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஏப்.29ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் சிபிஐ விசாரணை என்பது உறுதியானது. நீதிமன்ற உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவானது, டான்ஜெட்கோ முன்னாள் அதிகாரிகள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.

தற்போது மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதற்கு விடப்பட்ட 9 டெண்டர்களில் ரூ.1028 கோடி முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 19) சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் அண்ணாநகர், பெருங்குடி உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்

மின்வாரிய டெண்டர்களில் ஊழல்: 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement