தமிழகத்துக்காகவே மேகதாது அணை; ஆசை காட்டுகிறார் கர்நாடக முதல்வர்

26


-நமது நிருபர்-




தமிழகத்துக்காகவே மேகதாது அணை; கர்நாடகாவுக்காக அல்ல என கர்நாடகா முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார்.

தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார் பேசுகையில், ''தண்ணீரை விட முக்கியமான வளம் எதுவும் இல்லை. தண்ணீர் நம்மை ஒருங்கிணைக்க வேண்டுமே தவிர பிரிக்கக்கூடாது. மேகதாது அணை திட்டம், கர்நாடகாவுக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் முக்கியமானது.

இந்த திட்டத்தின் ஒவ்வொரு துளி தண்ணீரும் தமிழகம், புதுச்சேரி மாநில விவசாயிகளுக்கு உதவும் என நான் உறுதி அளிக்கிறேன். இந்த திட்டத்தை நிறைவேற்ற எங்களுக்கு உதவுங்கள் என்றார்.

பின், அவர் அளித்த பேட்டி: தென்மண்டல குழு கூட்டம் சிறப்பாக நடந்தது. கூட்டத்தில், அனைத்து தென் மாநிலங்களின் நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தோம்.

1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை தொடர வேண்டும் என்றும், தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை விடுத்தோம்.

இந்த விவகாரத்தில், தமிழகம், கேரளா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உட்பட பெரும்பாலான மாநிலங்கள் ஒரே மாதிரியான நிலைப்பாட்டில் உள்ளன. மேலும், நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக, தனியே ஒரு கூட்டத்தை நடத்தி, சுமுகமான தீர்வுகளை காண கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேகதாது அணையில் இருந்து, குடிநீர் தேவைக்கான, 5 டி.எம்.சி., நீரை தவிர்த்து, மீதமுள்ள தண்ணீர் முழுவதும் தமிழகத்திற்கு திறந்து விடப் படும். தமிழகத்துக்காகவே மேகதாது அணை; கர்நாடகாவுக்காக அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement