சிமெண்ட் சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சிமெண்ட் சாலையை சீரமைக்க கோரி, கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த க.தொழூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வடக்கு தெருவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சிமெண்ட் சாலை போடப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த சிமெண்ட் சாலை உள்வாங்கியுள்ளதால், மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி, சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், கிராம மக்கள் சாலையில் செல்ல கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மேலும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, தற்போது சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலையை சீரமைக்கவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி கலைந்து சென்றனர்.
கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.