(டிட் பிட்ஸ்--–2) இரவு 10 மணிக்கு பிறகு பிரியாணி சாப்பிடலாமா? 

பிரியாணி பலருக்கும் மிகவும் பிடித்த உணவு. ஆனால் வேலை முடிந்து இரவு நேரத்தில் தாமதமாக பிரியாணி சாப்பிடுவது உடலுக்கு பாதிப்பா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். குறிப்பாக இரவு 10 மணிக்கு பிறகு பிரியாணி சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும், செரிமானத்தில் மாற்றம் உண்டாகுமா என்ற கேள்விக்கு விடையில்லை.

இரவில் பிரியாணி சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்? ஒரு முறை மட்டும் இரவில் பிரியாணி சாப்பிடுவது பெரும்பாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் பிரியாணியில் அதிக கலோரி, வெள்ளை அரிசி, எண்ணெய், மசாலா மற்றும் இறைச்சி இருப்பதால் அது கனமான உணவாக மாறுகிறது. இதை தூங்குவதற்கு முன் சாப்பிடும்போது செரிமானத்திற்கு அதிக நேரம் தேவைப்படும்.பிரியாணி போன்ற கனமான உணவுகளை தாமதமாக உட்கொள்ளும் போது அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் மற்றும் அஜீரணம், வயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு மற்றும் இரவில் தூக்கம் கலைதல் போன்ற பிரச்சனைகள் வரலாம். குறிப்பாக, சாப்பிட்ட உடனே படுத்துக் கொள்ளும்போது இந்த அறிகுறிகள் மேலும் தீவிரமடையும்.

இரவில் ஏன் செரிமானம் சிரமமாகிறது? பகல் நேரத்தில் உடல் சுறுசுறுப்பாக இயங்கும் போது செரிமானமும் வேகமாக நடைபெறும். ஆனால், இரவில் உடல் ஓய்வு நிலைக்கு தயாராகும். அப்போது, அதிக கொழுப்பு மற்றும் மசாலா நிறைந்த உணவுகள் வயிற்றில் நீண்ட நேரம் தங்கி மெதுவாக செரிமானமாகலாம். இதனால் சிலருக்கு இரவில் வயிறு கனமாகவும், கடுமையான தாகம் எடுக்கும் உணர்வும் ஏற்படலாம்.

இரவு பிரியாணி உடல் எடையை அதிகரிக்குமா? ஒரு நாள் சாப்பிடுவதால் உடனே உடல் எடை அதிகரிக்காது. இருப்பினும், தொடர்ந்து இரவு நேரத்தில் அதிக அளவு பிரியாணி சாப்பிடுவது உடல் எடையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இரவு நேரத்தில் தேவைக்கு அதிகமான கலோரிகளை உடல் பெறுவதால், உடல் எடை அதிகரிப்பு மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாடு பாதிக்கப்படலாம். இரவில் அதிகமாக சாப்பிடுவதால் தூக்கம் பாதிக்கப்பட்டு, மறுநாள் அதிக பசி ஏற்பட்டு மீண்டும் அதிகமான உணவை சாப்பிடும் நிலைக்கு வழிவகுக்கலாம்.

யார் அதிக கவனமாக இருக்க வேண்டும்? கீழ்க்கண்ட உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இரவு நேர பிரியாணி சாப்பிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.

நீரிழிவு நோய், உடல் பருமன், அமிலத்தன்மை, கொழுப்பு கல்லீரல், அதிக கொலஸ்ட்ரால்.



இரவில் பிரியாணி சாப்பிட வேண்டுமென்றால் என்ன செய்யலாம்? பிரியாணியை முழுமையாக தவிர்க்க முடியாத பட்சத்தில், மருத்துவர்கள் கூறும் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

பிரியாணியை மிகப்பெரிய அளவில் சாப்பிடுவதற்கு பதிலாக சிறிய அளவில் மட்டும் உட்கொள்ளுங்கள்.சாப்பிட்ட பிறகு குறைந்தது 2 முதல் 3 மணி நேரத்திற்கு பிறகே தூங்க செல்லுங்கள்.பிரியாணியுடன் தயிர் அல்லது காய்கறி சாலட் சேர்த்துக்கொள்வது செரிமானத்திற்கு உதவிபுரியும்குளிர்பானங்கள், செயற்கை பானங்கள் மற்றும் டெசர்ட்டுகளை தவிர்ப்பது கூடுதல் கலோரிகளை தடுக்கும்.​சாப்பிட்ட பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது செரிமானத்தை எளிதாக்க உதவும்.அதிக மசாலா உணவுக்கு பிறகு போதுமான தண்ணீர் பருகுவது தாகத்தைக் குறைக்கும்.

லேட் நைட் பிரியாணி சாப்பிடலாமா? வேண்டாமா? பிரியாணி என்பது நாவில் எச்சில் ஊறச் செய்யும் சுவையான உணவுதான். ஆனால், அதை மிகத் தாமதமாக உட்கொள்வது செரிமான மண்டலத்திற்கு கூடுதல் சுமையைத் தரும். எப்போதாவது ஒருமுறை சாப்பிடுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும், அடிக்கடி இரவு நேரத்தில் அதிகப்படியான பிரியாணி சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பு, அமிலத்தன்மை மற்றும் தூக்க பிரச்சனையை ஏற்படுத்தும்.பிரியாணியை முழுமையாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அளவோடு, முடிந்தவரை மாலையிலேயே சாப்பிடுவது, காய்கறி அல்லது தயிருடன் சமநிலைப்படுத்துவது மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வது ஆரோக்கியமான அணுகுமுறையாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

Advertisement