அங்கன்வாடி மையத்தை பாதுகாப்பான நிரந்தர இடத்திற்கு மாற்றக்கோரி முற்றுகை

ப.வேலுார்:அங்கன்வாடி மையத்தை பாதுகாப்பான மற்றும் நிரந்தர இடத்திற்கு மாற்றக்கோரி, குழந்தைகளின் பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ப.வேலுார் டவுன் பஞ்., 6வது வார்டு, மகா மாரியம்மன் கோவில் அருகே அரசு கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. அந்த கட்டடம் பழுதானதால், அதே பகுதியில் தனியார் ஓட்டு கட்டடத்தில் அங்கன்வாடி மையம், மூன்று ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டது. இங்கு, 18க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். தற்போது, வாடகை கட்டடமும் பழுதாகி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
மேலும், அங்கன்வாடி மையத்தை சுற்றி கால்நடைகள் வளர்த்து வருவதால், கொசு தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. கட்டட உரிமையாளர் முருகன், 55, என்பவர், கட்டடம் பழுது காரணமாக, பல மாதங்களாக அங்கன்வாடி மையத்தை காலி செய்து தருமாறு கேட்டுவருகிறார். பல நாட்களாகியும் காலி செய்யாமல் இருந்ததால், அங்கன்வாடி மையத்தை காலி செய்யுமாறு அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையறிந்த குழந்தைகளின் பெற்றோர், நேற்று அங்கன்வாடி மையத்துக்கு திரண்டு வந்து, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கன்வாடி மையத்தை பாதுகாப்பான நிரந்தர கட்டடத்திற்கு மாற்றும் வரை குழந்தைகளை அனுப்பமாட்டோம் எனக்கூறி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கன்வாடி அதிகாரிகள், 'நாளை முதல் அங்கன்வாடி இடமாற்றம் செய்யப்படும்' என உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்டு பெற்றோர் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி கூறுகையில், ''கடந்த சில ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓரிரு நாட்களில் அருகில் உள்ள அரசு கட்டடத்தில் அங்கன்வாடி செயல்படும்,'' என்றார்.

Advertisement