4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணமா? எஸ்.பி.ஐ., அதிகாரிகள் விளக்கம்

5

மதுரை: ஏ.டி.எம்.,ல் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேமிப்பு கணக்கு வைத்திருப்போரிடமே ரூ.15 மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணம் வசூலிக்கப்படும். இது மற்ற வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது,'' என, எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

வரும் அக்., 1 முதல் 'அடிப்படை சேமிப்பு வைப்பு கணக்கு' (பி.எஸ்.பி.டி.ஏ.,) வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும் முதல் நான்கு முறை பணம் எடுப்பது இலவசமாக இருக்கும். அதற்கு மேல் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.15 மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணம் வசூலிக்கப்படும். அதேநேரம் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் எவ்வித கட்டணமும் இன்றி வழக்கம் போல மேற்கொள்ளலாம் என, எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

வங்கி அதிகாரிகள் கூறியதாவது: எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.,களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் எனத்தவறான தகவல் பரவுகிறது. அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த புதிய கட்டண மாற்றம் செல்லுபடியாகும்.

மற்ற வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு எவ்வித மாற்றமும் இல்லை. அவர்கள் வழக்கம் போல் மாதம் 5 முறை இலவசமாக ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கலாம். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், வங்கிகளில் கூட்டத்தை குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.

வாடிக்கையாளர்கள் கூறியதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்காக அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புகணக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டியதில்லை. இதனால் சாமானியர்கள் இக்கணக்கை வைத்துள்ளனர். அவர்கள் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜி.எஸ்.டி., உடன் கட்டணம் விதிப்பது இம்முறையின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது.

வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு பல ஏ.டி.எம்.,களில் ரூ.500 நோட்டுகள் கிடைப்பதில்லை. இதனால் பல முறை எடுக்க வேண்டியுள்ளது என்றனர்.

Advertisement