அரசு மாணவர் விடுதிகளின் ஆய்வு குழுக்கள்  மீண்டும் வருமா; தொடர் ஆய்வுகளுடன் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு

விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆட்சியை போன்று அரசு மாணவர் விடுதிகளுக்கான தாசில்தார் நிலை ஆய்வுக்குழுக்கள் அமைக்க மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் கடந்த முறை போல் அமைத்ததோடு நிற்காமல் தொடர் ஆய்வுகள் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என 104 மாணவர் விடுதிகள் உள்ளன. 6 முதல் பிளஸ் டூ வரையிலான மாணவர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விடுதியில் தங்கி படிக்கின்றனர். இதன் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் வெளியூர் பள்ளிகளில் படிக்கின்றனர்.

இம்மாணவர்களுக்கு 3 கட்டங்களாக மருத்துவ பரிசோதனை, பாய், தலையணை, போர்வை, விளையாட்டு பொருட்கள், சீருடைகள், 10, பிளஸ் டூ மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நுால்கள் வழங்கப்படுகின்றன. இம்மாணவர்களுக்கு 5 நாட்களுக்கு சத்து மிகுந்த முட்டை யுடன் கூடிய மதிய உணவும், வாரம் ஒரு நாள் மட்டனும் வழங்கப்படும்.

இவற்றின் செயல்பாடுகளை அதிகரிக்க முந்தைய தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தாசில்தார் நிலை அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. அரிசி, பருப்புகளில் வண்டுகள் இருக்கக்கூடும் என்ற ஐயத்தை போக்க வாரம் ஒரு முறை அவர்களே விடுதிகளுக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினர்.

துவக்கத்தில் நன்றாக நடந்த ஆய்வுகள் மாதங்கள் கடந்த பின் தற்போது பெயரளவிலே நடந்தது. தற்போது சுத்தமாக ஆய்வுகளே இல்லை. இதனால் மீண்டும் விடுதிகளில் தன்னிச்சை செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. ஒரு சில விடுதிகள், சில காப்பாளர்கள் நல்லெண்ண முனைப்போடு செயல்படுத்தும் சில விடுதிகளை தவிர்த்து ஊரகப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான விடுதிகள் இவ்வாறு தான் இயங்குகின்றன. சில விடுதிகளில் கட்டடங்கள் சேதம் அடைந்து, உறுதி தன்மையை இழந்து விபத்து நேரிடும் வாய்ப்புள்ளது.

விடுதிகளில் மாணவர்கள் தேவையை அறிய திடீர் ஆய்வுகள் நடத்த வேண்டும். அதற்கு குழுக்கள் ஏற்படுத்துவது அவசியமாகிறது. இதனால் தற்போதய அரசு குழுக்கள் அமைப்பதோடு ஆய்வுகள் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் விரும்புகின்றனர்.

Advertisement