நீதிபதிகள் கடவுள்கள் அல்ல: பிரிவுபசார விழாவில் சுப்ரீம்கோர்ட் நீதிபதி சஞ்சய் கரோல் பேச்சு

புதுடில்லி: நீதிபதிகள் கடவுள்கள் அல்ல, அவர்களால் எல்லா தீர்ப்புகளையும் சரியாக வழங்க முடியாது என்று ஓய்வுபெறும் நாளில் நீதிபதி சஞ்சய் கரோல் கூறி உள்ளார்.

2923ம் ஆண்டு பிப்.6ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக சஞ்சய் கரோல் பதவி உயர்வு பெற்றார். இன்று அவர் ஓய்வுபெறும் நாளாகும். தமது கடைசி பணி நாளில் அவருக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது. இந் நிகழ்வில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி வி. மோகனா, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் பிரதீப் ராய் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அப்போது சஞ்சய் கரோல் பேசியதாவது;

நீதிபதிகளாகிய நாங்கள் ஒன்றும் கடவுள்கள் அல்ல. நாங்கள் அளிக்கும் ஒவ்வொரு தீர்ப்பும் சரியாக இருக்காது. மனுதாரரை மட்டும் பார்க்காமல் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் உற்று கவனிப்பது எப்போதுமே எங்கள் கையில் இருக்கும் முக்கிய விஷயம்.

நீதிபதியின் இருக்கை உயரமாக அமைக்கப்பட்டு இருப்பது, அதிகாரத்தை குறிப்பதாக தோன்றலாம். வசதியான நிலையில் இருந்து பார்க்கும் போது, கண்ணியம், நேர்மை என முற்றிலும் வேறுபட்ட ஒன்றை குறிக்கிறது. ஒரு நீதிபதி என்பவர், நீதிபதியின் அங்கியை அணிவதற்கு முன்பும், அதை கழற்றிய பின்னரும் நீதிபதியே.

இவ்வாறு நீதிபதி சஞ்சய் கரோல் பேசினார்.

1969ம் ஆண்டு ஆக.23ல் பிறந்த சஞ்சய் கரோல், சிம்லாவில் கல்வி பயின்று, ஹிமாச்சல பிரதேச பலகலை.யில் சட்டப்படிப்பை முடித்தார். 1998ம் ஆண்டில் ஹிமாச்சல பிரதேச வழக்கறிஞர் பொறுப்பேற்று 2003ம் ஆண்டு வரை பணியாற்றினார். 2007ல் ஹிமாச்சல பிரதேசம் ஐகோர்ட் நீதிபதி, 2018ல் திரிபுரா ஐகோர்ட் தலைமை நீதிபதி, 2019ல் பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி என பதவி வகித்தார். 2023ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

Advertisement