'இது என்ன புது வம்பு?'

'வெளிநாட்டில் படித்தவர்களுக்கு, உள்ளூர் மொழி பெரிய பிரச்னையாக உள்ளதே...' என கவலைப்படுகின்றனர், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கல்வி அமைச்சராக இருப்பவர் சந்தீப் சிங். இவர், உ.பி., முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மறைந்த கல்யாண் சிங்கின் பேரன்.

சமீபத்தில், உ.பி., சட்டசபையில் கல்வித்துறை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து சந்தீப் சிங் பேசினார். அப்போது, ஹிந்தியில் எழுதியிருந்த அறிக்கையை அவரால் சரளமாக படிக்க முடியவில்லை; தட்டுத் தடுமாறியபடி படித்து முடித்தார்.

சந்தீப் சிங்கின் இந்த தடுமாற்றத்தை, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கிண்டல் அடித்தனர். சமூக வலை தளங்களிலும் இது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. 'கல்வி அமைச்சராக பதவி வகிப்பவருக்கு, ஹிந்தியில் படிக்க முடியவில்லை; பேசவும் முடியவில்லை...' என, பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

பா.ஜ.,வினரோ, 'சந்தீப் சிங், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் படித்தவர். அதனால், ஹிந்தியை சரளமாக அவரால் படிக்க முடியாது. அதற்காக, வெளிநாட்டில் படித்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கக்கூடாது என கூறுவது ஏற்புடையது அல்ல...' என, பதிலடி தந்தனர்.

உ.பி., மக்களோ, 'இது என்ன வம்பாக இருக்கிறது. அமைச்சர்களை நியமிக்கும்போது ஹிந்தி தெரியுமா, தெரியாதா என தேர்வா நடத்த முடியும்...?' என கேட்கின்றனர்.

Advertisement