பொது விருந்து: ஹிந்து அமைப்பு கடும் எதிர்ப்பு
மதுரை: ‘காமராஜர் பிறந்த நாளன்று கோயில்களில் வழிபாடு, பொது விருந்து நடத்தப்படும்’ என்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவிப்புக்கு ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இயக்கத்தின் மாநில பொருளாளர் ஆதிசேஷன் கூறியதாவது: கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் மட்டுமே வழங்க வேண்டும். ஆக.15 காமராஜர் பிறந்த நாளில் கோயில்களில் பொது விருந்து நடத்துவதை ஏற்க முடியாது. அதை அரசு சார்பில் நடத்த வேண்டும். கோயில் சொத்துகளை மீட்பது, பாதுகாப்பதில் மட்டுமே அறநிலையத்துறை கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் பல ஆயிரம் கோயில்கள் சிதிலமடைந்து, ஒருவேளை பூஜைக்கு கூட சிரமப்படுகின்றன. காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்துதர வேண்டும். கோயில் வருமானத்தை கோயில் திருப்பணிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்றார்.