‘டெங்கு’ விழிப்புணர்வு கூட்டம்
மதுரை: சுகாதாரத்துறை சார்பில் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா நோய்களைத் தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார், மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
கலெக்டர் பேசியதாவது:
பொதுமக்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவேண்டும். நீரேற்று, நீர்த்தேக்க நிலையங்களில் குளோரின் கலந்த குடிநீர்தான் விநியோகிக்க வேண்டும். மேல்நிலை தொட்டிகள், குடிநீர் சேமிப்புத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என கண்காணிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் தேவையான டெங்கு தடுப்புப் பணியாளர் நியமித்து கொசுப்புழு ஒழிப்பு, தடுப்புப் பணியாற்ற வேண்டும். மழைநீர், கழிவுநீர் நீண்ட நாட்கள் தேங்கும் பகுதியை கண்டறிந்து அகற்ற வேண்டும். பழைய பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது வட்டார மருத்துவ அலுவலருக்கு தெரிவித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.