பற்றாக்குறை வறட்சியால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில் மானிய விலையில் வைக்கோல் வழங்க கோரிக்கை
குஜிலியம்பாறை, ஆக.23
குஜிலியம்பாறை, வேடசந்துார் தாலுகாக்களில் நிலவும் வறட்சியால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு வைக்கோல் கொள்முதல் செய்து கால்நடை வளர்ப்போருக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, வேடசந்துார் தாலுகாக்களில் பாசன விவசாயத்தை விடவும் மானாவாரி பயிர் விவசாயமே அதிகம் நடக்கிறது. ஆனால் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழையும் பொய்த்து போனதால் கம்பு, சோளம், நிலக்கடலை உள்ளிட்ட மானாவாரி பயிர் விவசாயமும் நசிந்து போனது.
இந்நிலையில் கடும் வெயிலால் மேய்ச்சல் நிலங்களில் பசுந்தீவனங்கள் கிடைப்பது அரிதான விஷயமாக மாறி வருகிறது. இதனால் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பட்டிருக்கும் தீவனப்பற்றாக்குறையை சரி செய்ய முடியாமல் கால்நடை வளர்ப்போர் தவிக்கின்றனர். இந்நிலை நீடித்தால் கால்நடைகளை வளர்க்க முடியாமல் அவற்றை அடிமாட்டு விலைக்கு விற்கும் அவல நிலையை சந்திக்க நேரிடும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற நிலை ஏற்பட்டதில் சிறப்பு நடவடிக்கையாக திருச்சி, தஞ்சை பகுதிகளில் வைக்கோல் கொள்முதல் செய்து ஒன்றிய, ஊரக பகுதிகளில் உள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கு குறைந்த விலையில் மாவட்ட நிர்வாகம் வழங்கியது. அதுபோல் தற்போதும் வைக்கோல் கொள்முதல் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயத்தில் இயந்திரமயமாக்கல், வியாபாரத்தில் தனியார்மயம் இவையெல்லாம் அழிவுக்கு வழிவகுத்தவை. அதன் பரிணாம வளர்ச்சியாக கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் உடனே கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தாய்ப்பாலுக்கு மாற்றான பசும்பால் கிடைப்பதிலும் கூட தட்டுப்பாடு ஏற்படும்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் கூறியதாவது: இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விரைவில் பனை, தென்னை மரங்கள் கூட காய்ந்து விடும். ஆடிப்பட்டத்திலும் மழை இல்லாததால் மானாவாரி விவசாயம் அறவே நின்று போனது.
தற்போது காடு, தோட்டங்களில் புல் பூண்டு கூட இல்லாத நிலையில் கால்நடைகளை வளர்ப்பது என்பது வெகு சிரமமாக உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் திருச்சி, தஞ்சை பகுதிகளில் இருந்து வைக்கோல் கட்டுகளை வாங்கி மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். குடிநீர் உள்பட அடிப்படை தேவைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.