அலையோரம் ஜொலித்த வண்ண பலுான்கள்: புதுச்சேரி உணவு திருவிழாவில் மேஜிக்...
பிப்டிக், இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மத்திய நடுத்தர சிறு, குறு, அமைச்சகம் இணைந்து நடத்தும் உணவுத் திருவிழாவால், புதுச்சேரி கடற்கரை நேற்று முன்தினம் முதல் விழாக்கோலம் பூண்டுள்ளது.
உணவு திருவிழாவிற்காக பறக்கவிடப்பட் ராட்சத பலுான்கள் இப்போது டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறிவிட்டது. பகலில் வானில் அசைந்தாடிப் பறந்த ராட்சத வண்ண பலுான்கள், சுற்றுலாப் பயணிகளின் பார்வையை மொத்தமாகக் காந்தமாய் ஈர்த்து வருகின்றன.
புதுச்சேரி வானில் மிதந்த சுட்டி பாண்டா கரடி, துருதுரு நாய்க்குட்டி, பிரம்மாண்ட திமிங்கலம், கிறிஸ்துமஸ் தாத்தா, மற்றும் செல்ல விநாயகர் கார்ட்டூன் பலுான்கள்... ஒவ்வொரு குழந்தையையும் அட.. என ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
பகலில் காற்றில் கவிதை பாடிய அதே வண்ணப் பலுான்கள், இரவானதும் தங்களுக்குள் ஆயிரமாயிரம் மின்மினிகளை ஒளித்து வைத்தது போல பிரகாசிக்கத் தொடங்கின. இருண்ட வானில் ஒளிர்ந்த பலுான்கள் அசைந்தாடிய காட்சி... கண்கள் கொள்ளாக் காவியமாய், நெஞ்சை அள்ளும் பேரழகாய் மிளிர்ந்தது.
சுற்றுலா பயணிகள்.. தங்கள் மொபைல் கேமராக்களுக்கு வேலை கொடுத்து, அந்த மின்னுபவைகளைக் கிளிக் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கடல் காற்றோடு சுடரொளி பலுான்களின் அழகை ரசித்து, நாவில் சுவை கூட்டும் உணவுகளை ருசிக்க... புதுச்சேரி கடற்கரை சாலைக்கு மிஸ் பண்ணாம போங்க...
தொடரும் கொண்டாட்டங்கள்:
இன்று 23-ம் தேதி: பழைய துறைமுக வளாகத்தில் காதுகளுக்குத் தேனமுதாகும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி..
28 முதல் 30 வரை: பாண்டி மெரினாவில் ஆக் ஷன் நிறைந்த பீச் வாலிபால், கால்பந்து, ஹேண்ட்பால் மற்றும் மல்லகம்பம் விளையாட்டுகள்..