2வது போட்டியிலும் படிக்கல் சதம்; முதல் நாளிலேயே வலுவான நிலையில் இந்தியா


கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இளம் வீரர் படிக்கல் இந்தப் போட்டியிலும் சதம் அடித்தார்.

கொழும்பு மைதானத்தில் இன்று துவங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். கேஎல் ராகுல் 18 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு ஜோடி சேர்ந்த படிக்கல் மற்றும் கேப்டன் கில் இருவரும் சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர்.

ஒரு பக்கம் கில் (50) அரைசதம் அடித்து ஆட்டமிழந்த நிலையில், மறுபக்கம் நிதானமாக ஆடிய படிக்கல், இந்தப் போட்டியிலும் சதம் அடித்தார். இவர் ஏற்கனவே காலேவில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்திருந்தார். படிக்கல் 117 ரன்னில் அவுட்டானார்.

அதைத் தொடர்ந்து வந்த பன்ட், லஹிரு குமார வீசிய பந்து, அவரது இடது மணிக்கட்டில் தாக்கியது. இதனால் காயமடைந்த அவர் பாதியிலேயே வெளியேறினார். பின்னர் வந்த ஜடேஜா 43 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. துரேல் (7), சரன்ஷ் ஜெயின்(4) ஆகியோர் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் அசிதா பெர்னான்டோ 3 விக்கெட்டும், லஹிரு குமாரா மற்றும் கேஷாரா நுவாந்தா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

Advertisement