தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் என்ன பிரச்னை? கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

12


புதுடில்லி: தமிழகத்துக்கு நீர் திறப்பதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்னை? இது குறித்து மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு முறையிடலாம் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.

தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் திறக்க கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று (ஆகஸ்ட் 24) சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.


அப்போது தமிழக அரசு தரப்பில் வக்கீல் சி.எஸ்.வைத்யநாதன் வாதிடுகையில், ''தமிழகத்திற்கு வர வேண்டிய உரிய பங்கு நீர் கிடைக்கவில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளின் படி நீர் திறந்துவிடப்பட வேண்டும். நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள், செயல்பாடுகள் குறித்து தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்; அணைகளில் நீர்வரத்து சேமிப்பை ஆய்வு செய்து, உரிய காலத்தில் நீரைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உள்ளது'' என தெரிவித்தார்.

கர்நாடகா தரப்பில் ஆஜரான வக்கீல் ஷியாம் திவான் வாதிடுகையில், ''காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. எங்களைப் பொறுத்தவரை நீர்ப்பங்கீட்டில் எந்த பெரிய பிரச்னையும் இல்லை'' என்றார்.

இதையடுத்து சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

* கடந்த விசாரணையின் போது திறந்துவிடப்பட்ட நீர் குறித்த விவரம் அடங்கிய வரைபடத்தை கர்நாடகம் சமர்ப்பித்தது.

* தற்போதைய சூழல் குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இரு தரப்பும் புதிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

* தமிழகத்துக்கு நீர் திறப்பதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்னை? இது குறித்து மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு முறையிடலாம். இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பிறகு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement