நாக்பூரில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் காஸ் கசிவு; 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

நாக்பூர்: மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட காஸ் கசிவு காரணமாக, 40க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோத்னி நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் 900 கிலோ எடையுள்ள சிலிண்டரில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இது கோத்னி நகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வேகமாக பரவியது. இதனால், அங்குள்ள பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு, மயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த நாக்பூர் மாநகராட்சி தீயணைப்புத் துறையினர், இரு தண்ணீர் லாரிகளையும், சுவாசக் கருவியுடன் கூடிய பணியாளர்களையும் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பியது. மேலும், ஆரஞ்சு சிட்டி வாட்டர் ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர். காஸ் கசிவான குளோரின் சிலிண்டரை, காஸ்டிக் சோடா கரைசல் உள்ள தண்ணீர்தொட்டியில் மூழ்கடித்தனர்.

தொடர்ந்து, காஸ் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடல்நலக்குறைவால் பாதிப்புக்குள்ளான பொதுமக்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement