குன்றத்துார் முருகன் கோவிலில் ஒரே நாளில் 60 திருமணங்கள்

குன்றத்துார்: முகூர்த்த நாளான நேற்று, குன்றத்துார் முருகன் கோவிலில், ஒரே நாளில் 60 திருமணங்கள் நடந்தன.

குன்றத்துார் மலை மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.

ஆடி மாதம் முடிந்து, ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால், கோவில் வளாகத்தில் நேற்று காலை 60 திருமணங்கள் நடந்தன.

திருமண விழாவிற்கு வந்தவர்கள், பக்தர்கள் என ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் குன்றத்துார் மலை கோவில் வளாகத்திலும், அடிவாரம் பகுதியில் உள்ள சாலைகளிலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் அவதிக்குள்ளாகினர்.

‘ஆவணி முதல் முகூர்த்தம் என்பதால் அதிக திருமணம் நடக்கும் என தெரிந்தும், குன்றத்துார் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என, பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

Advertisement