வீட்டின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: மீண்டும் போலீசார் இரவு ரோந்து பணி துவங்க கோரிக்கை
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் போலீசார் இரவு ரோந்துப்பணி நிறுத்தப்பட்டு விட்டதால் கொள்ளைக்கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில் அண்மை காலமாக வீடுகளை குறி வைத்து, பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த இந்த திருட்டு சம்பவங்கள் ஆங்காங்கே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரவு நேரங்களில் டி.எஸ்.பி., தலைமையில் இரவு ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு வந்தது.
அதனால் மாவட்டத்தில் அபாயகரமான சம்பவமோ, திருட்டோ நடந்துவிட்டால் எப்படியாவது, இரவு போலீசாரிடம் வாகன தணிக்கையில் மாட்டிக்கொள்வது சுலபமாக இருந்தது. தற்போது என்ன காரணத்தினாலோ இரவு ரோந்துப்பணி பல இடங்களில் நிறுத்தப்பட்டது. இது, கொள்ளை கும்பலுக்கு சிவப்பு கம்பளம் விரித்ததுபோல் அமைந்துவிட்டது.
கடந்த ஒன்றரை மாதங்களில் மாவட்டத்தில் மட்டும், 6 வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு, வழிப்பறி 2, திருட முயற்சி 8 ஆக, மொத்தம், 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, பெண்ணாடம் அடுத்த இறையூரில் அடுத்தடுத்து, 2 வீடுகளின் பூட்டை உடைத்து, 17 சவரன் நகை, 25,000 ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது. இது தவிர, 8 வீடுகளில் கொள்ளை முயற்சியும் நடந்துள்ளது. இது குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த ஜூலை, 22ம் தேதி சிதம்பரம், வடக்கு வீதியில் அய்யப்பன் தீட்சிதர் வீட்டில் கதவை உடைத்து சாமி சிலை கழுத்தில் இருந்த, 5 சவரன் செயின் திருடு போனது.
தொடர்ந்து 26ம் தேதி புதுச்சத்திரம் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர் மனோகரன் வீட்டில் பூட்டை உடைத்து, 30 ஆயிரம் ரொக்கம், ஒரு சவரன் தங்கம், 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயின.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரை கைது செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிதம்பரம் கனகசபை நகர், செந்தாமரை வீட்டின் கதவை உடைத்து, 20 சவரன் நகை திரு டுபோனது. இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லிக்குப்பம், நத்தப்பட்டில் கடந்த, 13ம் தேதி வீட்டிற்கு நடந்து சென்ற அரசு பெண் அதிகாரியை வழிமறித்து 3 சவரன் செயின் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நாளில் கடலுார் அடுத்த பி.வடுகப்பாளையத்தில் கூட்டுறவு வங்கி நகை மதிப்பீட்டாளர் செல்வராஜ் வீட்டின் கதவை திறந்து, 21 சவரன் நகை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் ஜவான்ஸ்பவன் சாலையில் கடந்த ஜூலை, 28ம் தேதி ஆடிட்டர் முருகன் என்பவரை வழிமறித்து 1,500 ரூபாய் ரொக்கம், 4 கிராம் மோதிரம் வழிப்பறி செய்த, 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதுபோன்று பல சம்பவங்கள் வழக்குப்பதிவு செய்யப்படாமல் உள்ளன. மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் எங்காவது வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே மீண்டும் போலீசார் இரவு ரோந்துப்பணியை தீவிரப்படுத்தினால் தான் பல சமூக விரோத செயல்களை தடுக்க முடியும் என்பது நிதர்சனம்.
மேலும்
-
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் என்ன பிரச்னை? கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
இந்தியா எழுச்சி பெறுகிறது, நம் நாடு திணறுகிறது; பாக்., அமைச்சர்கள் புலம்பல்
-
நாக்பூரில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் காஸ் கசிவு; 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய மைல்கல்; கோலியின் சாதனையை முறியடித்த கில்!
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 வெற்றியாளர் 19 வயது கேரளா பெண் கஸியா லிஸ் மெஜோ
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு