அதானியுடன் கர்நாடகா முதல்வர் சிவகுமார் சந்திப்பு; ராகுலிடம் அனுமதி பெற்றாரா? என பாஜ விமர்சனம்

5


பெங்களூரு: தொழிலதிபர் அதானியை கர்நாடகா முதல்வர் சிவகுமார் நேற்று (ஆக.,23) சந்தித்து பேசினார். அதானியை தேசிய அளவில் எதிர்த்து வரும் காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாடு என்று பாஜ விமர்சித்துள்ளது.

நேற்று காலை பெங்களூருவில் உள்ள கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமாரின் இல்லத்திற்கு சென்ற தொழிலதிபர் அதானி, சுமார் 30 நிமிடம் சந்தித்து பேசினார். பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.22,267 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள 16.75 கி.மீ., நீளமுள்ள இரட்டைச் சுரங்கப் பாதை திட்டத்திற்கான ஒப்பந்தத்தை அதானி குழுமம் எடுத்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

அதானியையும், மத்திய அரசையும் லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தொடர்புபடுத்தி விமர்சித்து வரும் நிலையில், அதானியை சிவகுமார் சந்தித்து பேசியது காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கர்நாடகாவில் அதானி குழுமம் பல்வேறு திட்டங்களை செய்து வரும் நிலையில், டிகே சிவகுமார் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, திடீரென அதானியை சந்தித்து பேசியது காங்கிரஸ் கட்சியினரிடையே பல்வேறு கேள்விகளையும், விவாதங்களையும் எழச் செய்துள்ளது.

இருப்பினும், தன்னை சந்திக்க வேண்டும் என்று அதானி நேரம் கேட்டதாகவும், மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று கூறிய முதல்வர் சிவகுமார், வேறு எதையும் விவாதிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதனிடையே, இருவரின் சந்திப்பு குறித்து பாஜ தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான அசோகா கடுமையாக விமர்சித்துள்ளார். அதானியை சந்திக்க ராகுலிடம் முதல்வர் சிவகுமார் அனுமதி பெற்று விட்டாரா? என்று கேள்வி எழுப்பிய அவர், தேசிய அளவில் அதானியை காங்கிரஸ் எதிர்த்து வரும் சூழலில், கர்நாடகாவில் காங்கிரஸ் அதானியுடன் கைகோர்த்து இருப்பதாக குற்றம்சாட்டினார்.

Advertisement