பணக்கார நுகர்வோர் எண்ணிக்கை; 2036க்குள் சீனாவை இந்தியா முந்தும்!

4


நமது நிருபர்




2036க்குள் சீனாவை விட அதிகமான பொருட்களை வாங்கும் திறன் மிகுந்த நுகர்வோர் இந்தியாவில் தான் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

2036க்குள் இந்தியா பல துறைகளில் சீனாவை முந்தும் அல்லது அதற்கு நிகரான வளர்ச்சியை எட்டும் என்று ஆய்வுகள் கணிக்கின்றன. அந்த வகையில் செல்வந்த நுகர்வோர் எண்ணிக்கையில் இந்தியா முன்னேறும் என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றன. இது நீல்சன் ஐக்யூ மற்றும் வேர்ல்ட் டேட்டா லேப் ஆகியவற்றின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாள் ஒன்றுக்கு 90 டாலருக்கும் (இந்திய மதிப்பில் ரூ.8,606) அதிகமாக செலவிடும் செல்வந்த நுகர்வோர் எண்ணிக்கையில் 2036ம் ஆண்டுக்குள் சீனாவை இந்தியா விஞ்சும்.

இந்தியாவில் இந்த எண்ணிக்கை 2 கோடியே 6 லட்சத்தில் இருந்து 10 கோடியே 8 லட்சமாக உயரும். அப்போது சீனாவில் இந்த எண்ணிக்கை 10.3 கோடியாக இருக்கும். வாடிக்கையாளர்கள் தரம் மற்றும் வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

நுகர்வோரின் வாங்கும் திறன் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. பல சீர்திருத்தங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மூலம் 2036க்குள் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.

அதேநேரத்தில் 2036ம் ஆண்டில் அமெரிக்காவில் 23.1 கோடி பொருட்களை வாங்கும் திறன் மிகுந்த நுகர்வோர் இருப்பார்கள். இது இந்தியா, சீனாவை விட அதிகமாகும். உலக அளவில் செல்வந்த மக்கள் தொகை 102.5 கோடியை எட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறிவிட்ட நிலையில், இளைஞர்களின் பலம் பொருளாதார வளர்சிக்கு வழிவகுக்கிறது; தற்போது இந்தியா முழுமையான பலத்தை அடைந்து, சர்வதேச அளவில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement