நடவடிக்கை எடுக்குமா ஹிந்து சமய அறநிலைத்துறை

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட வி.சி.க., விவசாய சங்க பாதுகாப்பு அமைப்பாளரும், சமூக ஆர்வலருமான ரமேஷ், முதல்வர் விஜய் மற்றும் அறநிலை துறை அமைச்சர், செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:


கிராம பகுதியில் 100 நாள் வேலை, அரசின் சீரிய முயற்சியால் 150 நாள் வேலையாக மாற்றம் செய்யப்பட்டு அரசு நிலங்கள், நீர் நிலைகளில் தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுகாவிற்கு உட்பட்ட நாவல் கிராமத்தில் 150 நாள் பணிகளில் அருகில் இருக்கும் தனியார் நிலங்களில் பணிகள் செய்வது மற்றும் தங்கள் இடம் அரசு நிலத்தில் வருகிறது என கட்டபஞ்சாயத்து செய்து பணம் வசூல் செய்வது என அதே கிராமத்தை சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று செய்து வருகிறது.

அதே கிராமத்தில், கட்டிட அனுமதி இன்றி, ஹிந்து சமய அறநிலையத்துறையின் பணி ஆணை ஏதும் இன்றி, சட்ட விதிகளை மீறி கோயில் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி,நீர் நிலைகளில் சுற்று சுவர் அமைத்துள்ளனர். மேலும், இந்த கட்டுமான பணிகளை ஏற்கனவே வருவாய் துறை தடுத்து நிறுத்தியும்,சுற்றுசுவர்கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட விதி மீறல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Advertisement