கல்வி நிறுவன விடுதிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை பயிற்சி
கோவை: தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், தனியார் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர்களுக்கான பயிற்சி பட்டறை, நேற்று பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரியில் நடந்தது.
தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மேலாண்மை கல்லுாரிகள் சங்க தலைவர் அஜித்குமார் லால்மோகன் பேசுகையில், ‘‘ சுத்தமாக உணவு தயாரிப்பது, சமைலறையை துாய்மையாக பராமரிப்பது, சமைப்பவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது ஆகியவை மூலம், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க முடியும்,’’ என்றார்.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா கூறுகையில்,‘‘ கேன்டீன்களில் உணவின் தயாரிப்பு, காலாவதி தேதி கட்டாயம் குறிப்பிட வேண்டும்,’’ என்றார்.
நிகழ்ச்சியில், சங்க செயலாளர் சேதுபதி, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி செயலாளர் யசோதாதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில், தனியார் பள்ளி முதல்வர்கள், விடுதி பொறுப்பாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு துறை பயிற்சி நேற்று வழங்கப்பட்டது.
102 தனியார் கல்லுாரிகள், 270 தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி, நேற்று வழங்கப்பட்டது.