கார் கவிழ்ந்து கேரள தம்பதி காயம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வாய்க்காலில் கார் கவிழ்ந்ததில், கேரள தம்பதி காயமடைந்தனர்.

வேப்பூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில், விளாங்காட்டூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாசன வாய்க்கால் பாலத்தில், நேற்று காலை 7:30 மணியளவில், கே.எல்.11 - ஏ.இ.2439 பதிவெண் கொண்ட இன்டிகா கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயங்கர சப்தம் கேட்டு அருகிலிருந்த கிராம மக்கள் ஓடிவந்து, காரில் இருந்த இருவரை மீட்டனர்.

விசாரணையில், அவர்கள், கேரளம் மாநிலம், கண்ணுாரை சேர்ந்த அஜில்ராஜ், 36, மனைவி ரியானியா, 30, என்பது தெரிந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வாய்க்கால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரிந்தது.

இருவரும், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருவருக்கும் லேசான காயம் என்பதால், முதலுதவி சிகிச்சை பெற்று மாற்று வாகனம் மூலம் தம்பதி புறப்பட்டுச் சென்றனர்.

விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement