விருதையில் நலிவடைந்த செராமிக் தொழிற்பேட்டை  மேம்படுத்தப்படுமா: த.வெ.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நலிவடைந்த செராமிக் தொழிற்பேட்டை, த.வெ.க., ஆட்சியிலாவது புத்துயிர் பெறுமா என உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்திலேயே விருத்தாசலத்தில் மட்டுமே செராமிக் தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. ஜங்ஷன் சாலையில், கடந்த 1965ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியில் 100 ஏக்கர் பரப்பளவில், செராமிக் தொழிற்பேட்டை துவங்கப்பட்டு, அகல் விளக்குகள், பீங்கான் பொம்மைகள், பியூஸ் கேரியர் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் தயாராகி வருகின்றன.

இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 5,000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். குறிப்பாக ஒடிசா, குஜராத், பீகார் போன்ற வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி, பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

நவராத்திரி, தீபாவளி பண்டிகை காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் அகல் விளக்குகள் அதிகளவு ஏற்றுமதியாகின. இதன் மூலம் பண்டிகை காலங்களில் மட்டும் 2 முதல் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது, மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக 60 சதவீதம் உற்பத்தி பாதித்து விட்டதாக கூறப்படுகிறது.

தொழிற்பேட்டை வளாகத்தில், மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் ராட்சத ஆலையும் துவங்கப்பட்டது. ஆனால், நிர்வாக மோதல், பராமரிப்பில் குறைபாடு போன்ற காரணங்களால், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி ஆலை மூடியே கிடக்கிறது. அதிலுள்ள உபகரணங்கள் துருபிடித்து பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது.

எனவே, அகல் விளக்குகள் உள்ளிட்ட பீங்கான் பொருட்கள் தயாரிப்புக்கு தேவையான வண்டல் மண் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். தகுதியான உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்களை அரசே வழங்க வேண்டும். இது குறித்து சிட்கோ நிர்வாகம் உரிய வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டும் எனக்கூறி கடந்தகால தொழில்துறை அமைச்சர்களை நேரில் சந்தித்தும் பயனில்லாமல் போனது என உற்பத்தியாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுகிறது. எனவே, தமிழகத்திலேயே விருத்தாசலத்தில் மட்டுமே இயங்கி வரும் செராமிக் தொழிற்பேட்டையை மேம்படுத்திட த.வெ.க., ஆட்சியிலாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

'மேக் இன் இண்டியா' போல மாற ரூ.50 கோடி நிதியாவது தேவை இது குறித்து செராமிக் உற்பத்தியாளர் ஆனந்தகோபால் கூறுகையில், 'தமிழகத்திலேயே இங்குதான் செராமிக் தொழிற்பேட்டையும், அதற்குரிய தொழில்நுட்பக் கல்லுாரியும் உள்ளது. இந்த தொழிலை மேம்படுத்திட ரசாயன பகுப்பாய்வகம் அவசியம் தேவை. புதுடில்லியில் செராமிக் தொடர்பாக ஏ.ஐ.ஐ., செராமிக்ஸ் என்ற ஆய்வும் செயல்படுகிறது.

அதுபோல், அண்ணா பல்கலையிலும் செராமிக் பாடப்பிரிவுகள் உள்ளன. எனவே, தொழில்நுட்பக் கல்லுாரியை 4 ஆண்டுகால கல்லுாரியாக மாற்றி, இதே துறையில் பி.டெக்., எம்.டெக்., முடித்த மாணவர்கள் மூலம் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லலாம். மேக் இன் இண்டியா போல, தொழிற்பேட்டை வளாகத்தில் மூலப்பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்.

புதிய கண்டுபிடிப்புகள் மட்டுமே தொழில் வளர்ச்சிக்கு பலம் தரும். பீங்கான் பொம்மைகளுக்கு வர்ணம் பூச, குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. சைனா கிளே, டிக்கானியர் கிளே, தான் கிளே, பால் கிளே மற்றும் கரூர், சேலம் மாவட்டங்களில் கிடைக்கும் பல வகை மண்ணை கலந்து மூலப்பொருட்களை உருவாக்கிட ஆலையை மீண்டும் துவங்க வேண்டும்.

இவற்றுக்கு தமிழக அரசு குறைந்தபட்சமாக ரூ.50 கோடியாவது நிதி ஒதுக்கி, செராமிக் தொழில் மேம்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

சிட்டிங் எம்.எல்.ஏ.,பிரேமலதா பேச்சு சிட்டிங் எம்.எல்.ஏ., பிரேமலதா விஜயகாந்த், நலிவடைந்த செராமிக் தொழிற்பேட்டை, பீங்கான் தொழில்நுட்பக் கல்லுாரிக்கு புத்துயிர் தர வேண்டும் என சட்டசபையில் பேசியுள்ளார். அதுபோல், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் காங்., ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க., கலைச்செல்வன், தே.மு.தி.க., முத்துக்குமார் மற்றும் விஜயகாந்த், பா.ம.க., கோவிந்தசாமி, தி.மு.க., குழந்தை தமிழரசன் என பலரும் பேசியது குறிப்பிடத்தக்கது.

@block_B@ துப்பாக்கி சுடும் போட்டி 'ஒலிம்பிக்கில் க்ளே பிஜீயன் ஷூட்டிங்' எனும் துப்பாக்கிசூடு போட்டி உள்ளது. வெளிநாடுகளில் இந்த விளையாட்டு பிரபலம். களிமண் வட்டுகளை பறக்கவிட்டு, சுட்டு வீழ்த்தும் விளையாட்டு. இதற்கு தேவையான களிமண் வட்டு, இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 105 கிராம் எடை கொண்ட வட்டு, ஆரஞ்சு மற்றும் கருப்பு கலந்த நிறத்தில் இருக்கும். சில நாடுகளில் வட்டின் பின்புறம் கலர் பவுடர் பேக் செய்திருக்கும். அது, துப்பாக்கியால் சுட்டதும் உடைந்து, வண்ணமயமாக சிதறும்.block_B

Advertisement