விமான நிலையமும் வேணும்... விவசாயமும் வேணும்; சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்

35


சென்னை: ' பரந்தூரில் விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலம் திருப்பித் தரப்படுவது குறித்து அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்,' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது; விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறிப்பது என்பது குழந்தையிடம் இருந்து தாயை பிடுங்குவதற்கு சமம். இந்த உலகத்தில் உள்ள எல்லா பெரிய வன்முறைகள், வளர்ச்சி என்ற வார்த்தையின் மூலம் தான் துவங்கியிருக்கும். எனவே, ஒரு நிலையான வளர்ச்சி தான் வேண்டும். விமான நிலையமும் வேண்டும். விவசாயமும் வேண்டும்.

அதற்கான இந்தப் பயணத்தில் சொன்னதை செய்தார் முதல்வர் விஜய். சுமார் ஆயிரம் ஆண்டுகள் தாண்டிய தொல்லியல் பொக்கிஷம் கம்பன் கால்வாய் அங்கு தான் இருக்கிறது. அங்கிருந்து தான் கடைமடை ஏரிகளுக்கு தண்ணீர் வரும். அப்படி வந்தால் தான் பல்லாயிரக்கணக்கான பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்யும். இது ஒரு தொல்லியல் மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் சங்கிலி. அதுமட்டுமில்லாமல், 1000 நாட்களைக் கடந்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பரந்தூரில் விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலம் திருப்பித் தரப்படுமா? என்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து தான் சொல்ல முடியும். விவசாயிகளுக்கு சாதகமாகவே பண்ணுவோம். அவசரப்பட்டு எதையும் நாம் சொல்லி விட முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. எனவே, அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement