ராமநாதபுரத்தில் நடை பாதைகள் மாயம் :தினமும் போக்குவரத்து நெரிசலால் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் சாலைத்தெரு, வண்டிக்காரத் தெரு, தலைமை தபால் நிலையம், வழிவிடுமுருகன் கோயில் பகுதியில் ரோட்டோர நடை பாதைகளை ஆக்கிரமித்துள்ளனர். நடை பாதையில் நடந்து செல்வது மக்களின் அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் அரண்மனை ரோடு, தலைமை தபால் நிலையம், வண்டிக்காரத் தெருவில் நகராட்சி, தாலுகா, பத்திரப்பதிவு ஆகிய அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், உள்ளிட்டவைகள் உள்ளன. மேலும் பஜார் பகுதியாக உள்ளதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வாகனங்களில் மக்கள் அதிகளவில் வருகின்றனர்.

பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன. சில கடைக்காரர்கள் முழுமையாக கம்பி வைத்தும், கட்டடம் அமைத்தும் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் வணிக வளாகங்கள், ஓட்டல்களில் பார்க்கிங் வசதி இல்லாததால் ரோட்டின் இருபுறத்திலும் டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்களை கண்டபடி நிறுத்துகின்றனர்.

குறிப்பாக அரண்மனை ரோடு, தலைமை தபால் நிலையம், வண்டிக்காரத் தெரு பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதே போல் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட இடங்களில் ரோட்டோர நடைபாதை ஆக்கிரமிப்புகள் உள்ளன.

எனவே போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் ரோடு மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும். வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களில் பார்க்கிங் வசதியை உறுதி செய்ய கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட வேண்டும்.

Advertisement