கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கிராம சாலையை ஆக்கிரமிக்கும் முள் மரங்கள்
திருப்புல்லாணி: ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி வரை உள்ள 65 கி.மீ., கிழக்கு கடற்கரை சாலை முள் மரங்களின் ஆக்கிரமிப்பால் தொடர் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சீமைக் கருவேல மரங்களின் பாதிப்பால் மூன்றாண்டுகளில் நுாறுக்கும் அதிகமான விபத்துகள் நடக்கின்றன. குறிப்பாக ஊராட்சிகளில் உள்ள கிராம சாலைகளில் இரு புறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் தங்களது ஆக்கிரமிப்பை துவக்குவதால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் வருவது கூட தெரியாமல் அடிக்கடி தொடர் விபத்து ஏற்படுகிறது.
முன்பு சாலை பணியாளர்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சியில் உள்ள பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் சாலையோர மரங்களை அகற்றி சுத்தம் செய்யும் செயல்பாடு நடந்தது. தற்போது கடந்த ஆறு மாதங்களாக சாலையோர மரங்களை அகற்றுவதற்கு கூட மனம் இல்லாத நிலையில் அதிகாரிகள் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
குறிப்பாக கிராமப் பகுதியில் உள்ள சாலைகளில் இடையூறாக உள்ள சீமைக் கருவேல மரங்களை மாதத்திற்கு ஒரு முறையாவது அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் ஆறு மாதங்களுக்கும் மேலாக அகற்றாமலும் சாலையோரங்கள் புதர் மண்டியும் உள்ளது. இவ்விஷயத்தில் 100 நாள் திட்ட பணியாளர்களை முறையாக பயன்படுத்த வேண்டும்.
முன்பு சீமைக் கருவேல மரங்களை அகற்றியும் தேவையான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதும் குளங்கள் மற்றும் கண்மாய் கரையோரங்களில் மராமத்து பணிகள் செய்வது வழக்கமாக இருந்தது. தற்போது மறைந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் உள்ளாட்சிகளில் பெரும் பாதிப்பை ஆளும் அரசு சந்திக்க வேண்டிய நிலை வரும்.
இவ்விஷயத்தில் உரிய வழி காட்ட வேண்டிய அலுவலர்கள் கண்டும் காணாமலும் கடந்து செல்வதால் பாதிப்பை மக்கள் சந்திக்கின்றனர். எனவே தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ள சீமைக் கருவேல மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
–––