கங்கனா ரணாவத் - க்ரீத்தி சனோன் சண்டையில் புகுந்த ராகுல்

44

புதுடில்லி: பெண்கள் ஆடை அணியும் விவகாரத்தில் நடிகைகள் கங்கனா ரணாவத், க்ரீத்தி சனோன் இடையே ஏற்பட்ட மோதலில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளே புகுந்து கருத்து தெரிவித்திருப்பது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகைக்கடை விளம்பர ஒன்றில் நடித்திருந்த ஹிந்தி நடிகை க்ரித்தி சனோன் அணிந்திருந்த ஆடை, சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளானது. மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. நடிகையும், பாஜ எம்பியுமான கங்கனா ரனாவத்தும், தன் பங்கிற்கு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அதாவது, 'ஏன் இதுபோன்ற ஆடையை அணிந்து உங்கள் சகோதரருக்கு ராக்கி கட்ட வேண்டுமா' என்று கேள்வி எழுப்பியிருந்தார். பலரும் இவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதனால், சம்பந்தப்பட்ட நகைக் கடை நிறுவனம், அந்த விளம்பரத்தை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிவிட்டது.

இதனிடையே, யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் நடிகை க்ரீத்தி சனோன் சமூகவலைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அந்தப் பதிவில்; பண்டிகைகள் என்பது நீங்கள் அணியும் ஆடைகளில் இல்லை, பாரம்பரியங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் உணர்வுகளிலும், அர்த்தத்திலும்தான் உள்ளது. பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நாம் நிறுத்தப்போகிறோம்? நமது கலாசாரம் பல ஆண்டுகளாக மாறி வருகிறது. ஆனால், ஒரு பெண்ணின் கலாசாரத்திற்கான மரியாதை அவள் அணியும் ஆடைகளை வைத்து மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. கலாசாரம் மற்றும் பாரம்பரியம் என்பது அவளது இதயத்தில் மட்டுமே உள்ளது, அவளது கழுத்துப்பட்டையில் அல்ல, என்று ஆவேசமாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகை க்ரீத்தி சனோனின் இந்தப் பதிவு காங்கிரஸ் எம்பி ராகுல் ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது ஸ்டோரியை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல், "ஒரு பெண் என்ன அணிகிறாள், என்ன செய்கிறாள், எங்கு செல்கிறாள் என்பது அவளது விருப்பம். பெண்கள் தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்காக அவர்களை கிண்டல் செய்வதை நிறுத்துங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

'இதெல்லாம் வேண்டாத வேலை, நடிகைகள் இருவர் மோதிக் கொள்ளும்போது, அதில் ராகுல் எதற்கு தேவையின்றி உள்ளே புகுந்து கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்' என்கின்றனர், காங்கிரஸ் கட்சியினர்.

Advertisement