உயிர்ம வேளாண்மையில் சாதனை; விவசாயிகள் மூவருக்கு விருது வழங்கினார் முதல்வர் விஜய்

4


சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் காவல், தீயணைப்பு துறை சார்பில் ரூ.164 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். மேலும், 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதையும் அவர் வழங்கினார்.

2025 - 2026ம் ஆண்டில் உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதை முதல்வர் விஜய் வழங்கினார். மேலும், டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார். தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம், காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் சார்பில் நிறைவு செய்யப்பட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்தில் ரூ.121.85 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள போலீஸ் குடியிருப்பு, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள தமிழக சிறப்பு காவல் 5ம் அணியினர் வளாகம், காஞ்சிபுரம் ஆயுதப்படை வளாகம் மற்றும் புனித தோமையார் மலை வளாங்களில் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள போலீஸ் பல்பொருள் அங்காடிகள், ரூ.2.91 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள துறைமுகம் காவல்நிலையத்தையும் திறந்து வைத்தார்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கோவை பீளமேடு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ரூ.10.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளையும் முதல்வர் விஜய் திறந்து வைத்தார். அதேபோல, சேலம் செவ்வாய்ப்பேட்டை, திருச்சி சமயபுரம், நாமக்கல், பெரம்பலூர், மதுரையின் டி.கல்லுப்பட்டி, வடிப்பட்டி, சிவகங்கையின் சிங்கம்புணரி ஆகிய இடங்களில் ரூ.23.86 கோடி செலவில் புதிய தீயணைப்பு நிலைய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. கோவை மேட்டுப்பாளையத்தில் 50 தீயணைப்பு பணியாளர்களுக்கான குடியிருப்பு ரூ.2.36 கோடி செலவில் கட்டுப்பட்டுள்ளது. இதனையும் முதல்வர் திறந்து வைத்தார்.

Advertisement