'நம்மை வளர்த்த கலையை நாம வளர்க்கணும்!'
பிரபல வில்லுப்பாட்டு கலைஞரான, தென்காசி மாவட்டம், அச்சம்குட்டம் கிராமத்தைச் சேர்ந்த மாதவி:
என் அம்மா பீடி சுற்றும் தொழிலாளி; அப்பா கொத்தனார். கலை பின்னணி எதுவும் இல்லாத குடும்பம். 14 வயதில் வில்லுப்பாட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்; 15 வயதில் அரங்கேற்றம் செய்தேன்.
வில்லுப்பாட்டெல்லாம் வயதானோர் மட்டும் பார்க்கும் கலை என்ற எண்ணமே அப்போது எல்லாருக்கும் இருந்தது.
அந்த எண்ணத்தை மாற்றி, இளம் வயதினரிடமும் இந்த கலையை கொண்டு செல்ல நினைத்தேன். அதற்கு இன்று இருக்கும் ஒரே வழி, சமூக வலைதளங்கள். என் தம்பியின் வழிகாட்டுதலுடன் களத்தில் இறங்கினேன்.
ஐந்தாண்டுகளில் என்னால் முடிந்த அளவு, வில்லுப்பாட்டை இளைய தலைமுறையினரிடம் சேர்த்திருக்கிறேன்.
இப்போது, இளைஞர்கள் பலரும் என்னிடம் வந்து, 'வில்லுப்பாட்டு சொல்லித் தாங்க' என்று கேட்கின்றனர். என்னை போலவே பல வில்லுப்பாட்டு கலைஞர்கள் இப்போது உருவாகி வருகின்றனர். எனக்கு வில்லுப்பாட்டை விட்டால், வேறு சிந்தனை எதுவும் கிடையாது.
ஆனால், சினிமாவில் பாடினால் இன்னும் பலரிடம் இந்த கலை சென்று சேரும் என்று தோன்றியது. இதற்கு முன் சினிமாவில் பாட வாய்ப்புகள் வந்தன; எதிர்பார்த்த மாதிரி இல்லாததால் மறுத்து விட்டேன்.
அது மட்டுமில்லாமல், அன்றாடம் கோவில் நிகழ்ச்சிகளும் வந்தபடியே இருக்கின்றன.
அதனால், சில சினிமா வாய்ப்புகளை தவிர்த்தேன். உண்மையை சொல்ல வேண்டும் எனில் வாய்ப்பும், பணமும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்.
ஆனாலும், நம்மை வளர்த்து விட்ட கலையை, கையை பிடித்து மேலே கொண்டு செல்லும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. சினிமாவுக்கு சென்றால், என் வில்லுடன் தான் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
அப்படி ஒரு வாய்ப்பாக, இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் இசையில், வேட்டசாமி திரைப்படம் அமைந்தது. அதனால், அதை பயன்படுத்திக் கொண்டேன்.
இந்த படத்தில் சில காட்சிகளில் நானும், என் பக்கவாத்திய கலைஞர்களும் வில்லுப்பாட்டு பாடுவது போன்ற காட்சிகள் வருகின்றன.
கிராமத்து மேடைகளில் பாடிய எனக்கு, அவ்வளவு பெரிய ஒலி அமைப்புகளை பார்த்ததும் சிறிது பதற்றமாகி விட்டது. ஆனால், அங்கிருந்தோர் எனக்கு நம்பிக்கை கொடுத்து பாட வைத்தனர். பாடி முடித்ததும் பெரிய சாதனை செய்து முடித்த உணர்வு வந்தது.
சரஸ்வதியின் அருள் என்றென்றும் நிலைத்து நிற்கும்