நேபாளத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 63 பேர் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு


புதுடில்லி: நேபாளத்தில் திரிசூலி 1 திட்டத்தில் பணியாற்றி வந்த இந்திய தொழிலாளர்களில் 63 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களின் பெயர் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

நேபாளத்தில் பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 392 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்பட 1,400க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். குறிப்பாக, இந்தியர்கள் 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுவரையில் வெள்ளத்தில் சிக்கிய 880க்கும் மேற்பட்டோரை ராணுவம் மீட்டுள்ளது.

மானசரோவர் யாத்திரை சென்ற தமிழர்கள் 21 பேர் நேற்று மீட்கப்பட்டது குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், நேபாளத்தில் திரிசூலி 1 திட்டத்தில் பணியாற்றி வந்த இந்திய தொழிலாளர்களில் 63 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சகத்தின் செயலாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால் வெளியிட்ட பதிவில், "நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள இந்தியர்களின் நிலை குறித்து புதிய தகவல் வெளியிடப்படுகிறது. திரிசூலி 1 திட்டத்தில் பணியாற்றி வந்த இந்திய தொழிலாளர்களில் 63 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது," எனக் குறிப்பிட்டுள்ளார்.

@twitter@https://x.com/MEAIndia/status/2093011788082344388?s=20twitter


இதுவரையில் 84 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்பு கொள்ள முடியாத 290க்கும் மேற்பட்ட இந்தியர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

Advertisement