பல்லாயிரம் கோடி சொத்து கைவிட்டுப் போனது; 75 வயதில் வேலைக்கு போகிறார் சுபாஷ் சந்திரா

15


-நமது நிருபர்-
ஒரு காலத்தில் மீடியா உலகில் கோலோச்சிய சுபாஷ் சந்திரா, 75, கடனில் மூழ்கி நிறுவனங்கள் அனைத்தையும் இழந்த நிலையில், சுவிட்சர்லாந்தில் பணியில் சேரப்போவதாக தெரிவித்துள்ளார்.

எஸ்செல் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா, 75. செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் அறிமுகமான காலத்தில் மீடியா உலகில் நுழைந்தவர். ஜீ டிவி என்ற பெயரில் அவர் தொடங்கிய நிறுவனம், பிரமாண்ட நிறுவனமாக வளர்ந்தது. 90 சேனல்கள், டிஷ் டிவி, எஸ்செல் வேர்ல்டு என்ற தீம் பார்க், டி.என்.ஏ., நாளிதழ் என அடுத்தடுத்து பல்வேறு நிறுவனங்களை தொடங்கினார்.

2016ல் ஹரியானாவில் இருந்து பாஜ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு தொழில்களை நடத்திய சுபாஷ் சந்திரா, கடந்த சில ஆண்டுகளாகவே தொழில் துறையில் பின்னடைவுகளை சந்தித்து வந்தார்.

அவரது கடன்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. வாங்கிய கடன்களை செலுத்த முடியாமல், நிறுவனங்கள் ஒவ்வொன்றாக இழக்க நேரிட்டது. கடைசியில் அவரது கடன்கள் எக்கச்சக்கமாக சென்ற நிலையில், திவால் நோட்டீஸ் கொடுத்து விட்டார்.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அவரது கடன் உத்தரவாதக் கோரிக்கைகளுக்கு ரூ.6.5 கோடி செலுத்தும் வகையிலான மறுமதிப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது. தனது சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் அந்த தொகையை செலுத்தி விடுவதாக சுபாஷ் சந்திரா அறிவித்துள்ளார்.

தன் பெயரில் குறிப்பிடப்படும் 22 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உத்தரவாதத்தை மறுத்துள்ள அவர், அந்த மதிப்பீடு தவறானது என்றும், உண்மையான புள்ளி விவரங்களை சில நாட்களில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ''இன்னும் ரூ.3993 கோடி மதிப்பிலான கடன்களுக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் நான் பொறுப்பாளர்.

ரூ.22 ஆயிரம் கோடி என்ற மதிப்பீடு தவறானது. கடந்த 2019ல் எங்கள் நிறுவனங்களுக்கு நெருக்கடி தொடங்கியபோது ரூ.45 ஆயிரம் கோடி கடன்கள் இருந்தன. அவற்றில் ரூ.43 ஆயிரம் கோடியை திரும்பச் செலுத்தி விட்டோம்,'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

தான் உருவாக்கிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கை விட்டுப் போன நிலையில், சுவிட்சர்லாந்தில் புதிய பணியில் சேர இருப்பதாகவும் சுபாஷ் சந்திரா அறிவித்துள்ளார். "நான் மீண்டும் சம்பாதிப்பேன், புதிய தொழில்களை உருவாக்குவேன்" என்று அவர் வெளியிட்ட வீடியோவில் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: எஸ்செல் குழுமத்தின் கடன்களை அடைப்பதற்காக சொந்த வீடு உள்ளிட்ட பெரும்பாலான தனிப்பட்ட சொத்துக்களை விற்றுவிட்டேன். தற்போது, ​​சுவிட்சர்லாந்தில் முதலீட்டுப் பணிகள் செய்யும் என் நண்பர்களுடன் இணைந்து பணியாற்ற ஒரு திட்டம் வைத்துள்ளேன்.

அடுத்த 1-2 வாரங்களில் அதன் விவரங்களை உங்களுக்குத் தருகிறேன். மேலும், குடும்பத்தினரிடமிருந்து 2-4 கோடி ரூபாய் கடன் வாங்கி, முன்னேற்ற பாதையில் உள்ள எங்களின் சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எனினும், சுபாஷ் சந்திரா தொடர்பான வழக்கில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அளித்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக, எச்.டி.எப்.சி., வங்கி உள்ளிட்டவை அறிவித்துள்ளன.

Advertisement