புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு சேவை உரிமை ஆவண திட்டம் செப். 1ல் அமல்
கோவை: போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் அளிக்கும் அனைத்து வித புகார், மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து, ‘குடிமக்கள் சேவை உரிமை ஆவணம்–2026’ என்ற புதிய நடைமுறையை கோவை மாநகர போலீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை செப்.1 முதல் அமலுக்கு வருகிறது.
மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்ற திட்டம் குறித்த வழிகாட்டுதல் கூட்டம் கமிஷனர் கண்ணன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புகார் அளித்தவுடன் உடனடியாக ஒப்புகை வழங்குதல், புலனாகக்கூடிய குற்றம் தொடர்பான தகவல் கிடைத்தால், சட்டப்படி தாமதமின்றி எப்.ஐ.ஆர்., பதிவு செய்தல், சாதாரண மனு என்றால், அதற்கான விசாரணை அதிகாரி 24 மணி நேரத்திற்குள் நியமிக்கப்பட வேண்டும். எளிய மனுக்களுக்கு 14 நாட்களும், விரிவான மனுக்களுக்கு 30 நாட்களும் விசாரணைக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மனுவின் நிலை குறித்து மனுதாரருக்கு 15 நாட்களுக்குள் அல்லது அதற்கு முன்பாக தகவல் அளிக்க வேண்டும்.
சைபர் நிதி மோசடி புகார் வந்தால், இயன்றவரை ஒரு மணி நேரத்திற்குள் முதல் பதில் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான புகார்களில் உடனடி பதிவு மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், காணாமல் போன குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சாலை விபத்து தகவல், திருட்டு வாகனம் அல்லது சொத்து தொடர்பான புகார் உள்ளிட்டவற்றிலும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். தவிர, தொலைந்த சான்றிதழ், பாஸ்போட், துப்பாக்கி உரிமம், தடையின்மை சான்று, ஆர்ப்பாட்டம் போன்றவற்றுக்கு அனுமதி உள்ளிட்ட அனைத்து வித சேவைகளுக்கும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
போலீசார் மீது புகார்
போலீசார் மீது பொதுமக்கள் புகார் அளித்தால், உடனடியாக ஒப்புகை வழங்கி, மேலதிகாரி உத்தரவின்படி உடனட ிவிசாரணை நடத்தப்படும். மேலும், காவல் சேவைகளுக்கு பணம், பரிசு அல்லது வேறு எந்தப் பயனையும் போலீசார் கேட்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புகார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீஸ் ஸ்டேஷனில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிடில், மேல்முறையீடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு இரு நாட்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நடத்தப்படவுள்ளன.