வயலில் களமிறங்கும் இளைய தலைமுறை
திருப்பூர் என்றாலே பின்னலாடைத் தொழில். ஆனால், ஜென்ஸி இளைஞர்களின் பார்வையில் விவசாயத்துக்கும் இப்போது ஒரு புதிய 'அப்டேட்' கிடைத்திருக்கிறது! விவசாயம் என்றால் வயல், சேறு, கலப்பை என்ற பழைய பிம்பத்தைத் தாண்டி,அக்ரி-டெக், ஹைட்ரோபோனிக்ஸ், ஏஐ, டிஜிட்டல் மார்க்கெட்டிங் என தொழில்நுட்பத்தோடு இணைந்த நவீன தொழில்முனைவு
வாய்ப்பாக விவசாயத்தைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் இவர்கள். நகரத்தின் நெரிசலுக்கு நடுவிலும் மாடித் தோட்டம், நஞ்சில்லா இயற்கை விவசாயம் என விதை போடும் இந்தத் தலைமுறை, “விவசாயம் பிழைப்புக்கான தொழில் மட்டும்தானா?” என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அதற்கான பதில், திருப்பூர் இளைஞர்களின் பார்வையில்...
சந்தை லாபகரம்
நித்யாமுரளி, இளம் விவசாயி, தண்ணீர் பந்தல்:
விவசாயத்தை நிலத்தில் பயிரிடும் வேலையாக மட்டும் பார்க்காமல், வினியோகச் சங்கிலி மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட நவீன வணிகமாக இளைஞர்கள் அணுக வேண்டும். விவசாயத்தில் பங்களிக்க நேரடியாக விவசாயியாக மாற வேண்டியதில்லை. ஏஐ, டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீர் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வுகண்டு தொழில்முனைவோராகலாம்.
மாடித் தோட்டத்தைத் தாண்டி, தண்ணீர் பற்றாக்குறை, விளைபொருளுக்கு சரியான விலை கிடைக்காதது, சந்தை வாய்ப்பின்மை போன்ற உண்மையான பிரச்னைகளில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைதளங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் விவசாயிகளையும் நுகர்வோரையும் நேரடியாக இணைத்தால், இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு லாபகரமான சந்தையை உருவாக்க முடியும்.
டெக் விவசாயம்
வைஷ்ணவ் விக்னேஷ், சிவில் இன்ஜினியர், பி.என். ரோடு:
கொங்கு மண்டலத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு விவசாயம் வாழ்க்கை முறையோடும் குடும்பப் பாரம்பரியத்தோடும் தொடர்புடையது. அதோடு ஜென்ஸி தலைமுறையின் தொழில்நுட்ப அறிவையும் இணைத்தால் விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும்.
அக்ரி-டெக், ஹைட்ரோபோனிக்ஸ், ஸ்மார்ட் நீர் மேலாண்மை போன்றவற்றுடன் விவசாயத்தை அணுக வேண்டும். நேரடியாக விவசாயம் செய்ய முடியாதவர்கள்கூட மார்க்கெட்டிங், வினியோகம், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், நேரடி விற்பனை என பல வழிகளில்
பங்களிக்கலாம்.சிவில் இன்ஜினியர்களும் வீடுகளை வடிவமைக்கும்போது கிச்சன் கார்டன், உள்ளரங்கப் பூங்கா போன்றவற்றுக்கு இடமளிக்கலாம்.விவசாயம் வயலில் மட்டும் நடப்பதில்லை. அது அடுத்த தலைமுறையின் புதுமை!
மண்ணும் டெக்கும் சேர்ந்தால் மாஸ் காம்போ
மண்ணில் விதை போடுவது மட்டும் விவசாயம் இல்லை. அந்த மண்ணின் பிரச்னைக்கு தொழில்நுட்பத்தில் தீர்வு தேடுவதும், விளைபொருளுக்கு உலகம் முழுக்க சந்தை தேடுவதும் விவசாயம்தான். வயலுக்குள் இறங்க முடியாத ஜென்ஸி இளைஞர்கள்கூட, தங்கள் அறிவால் விவசாயத்துக்குள்
இறங்கலாம்.
நேற்று வரை 'விவசாயம்' என்றால் மண். இன்று அதோடு டெக்கும் சேரட்டும்.
மண் + டெக் = ஜென்ஸியின்
அடுத்த விவசாயப் புரட்சி!
வேர்களை மறக்காதே!
பார்த்திபன், சட்ட மாணவர், பட்டிமன்றப் பேச்சாளர், குமார் நகர்:
இன்றைய இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளும் சுதந்திரமும் இருக்கிறது. ஆனால், அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் மதுப்பழக்கம், ஆன்லைன் கேம்களில் மூழ்குவது வேதனை.
நகரங்களில் வளர்ந்த இளைஞர்கள் கிராமங்களுக்குச் சென்று விவசாய முறைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஐ.டி., மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட துறைகளில் வேலைக்குச் செல்லும்போது, நமது அடிப்படை ஆதாரமான விவசாயத்தையும் கிராமப்புற வேர்களையும் மறந்துவிடக் கூடாது. விவசாயம் வெறும் கிராமப்புறத் தொழில் அல்ல; அது நமது வாழ்வியல் உரிமையும் அடையாளமும். 'விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்' என்பதை இன்றைய தலைமுறை உணர வேண்டும்.
மொபைலை விடுங்க! ஹஸ்விதா பாலா, மாணவி, குமார் நகர்:
எல்லாமே எளிதில் கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மையும், நாகரிக வாழ்க்கை மீதான மோகமும் இளைஞர்களை விவசாயத்திலிருந்து விலக்குகிறது.
அளவுக்கு அதிகமான கைப்பேசிப் பயன்பாடு, உடல் உழைப்பையும் இயற்கையுடனான தொடர்பையும் குறைத்துவிட்டது. விவசாயத்தைக் கற்கப் பெரிய முயற்சி தேவையில்லை. மொபைலில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, வீட்டின் மாடியிலேயே சிறு தோட்டம் அமைத்துப் பாருங்கள். இயற்கையோடு இணைந்ததும் விவசாயத்தின் மகத்துவம் புரியும்.
ஐ.டி. உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவது செல்வத்தைப் பெருக்கலாம். ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் உண்மையான மகிழ்ச்சிக்கும் இயற்கையோடு இணைந்த வாழ்வே அடித்தளம்.
வேளாண்மையில் உயர்கல்வி கற்று, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் இளைஞர்கள்தான் நாளைய விவசாயத்தை மாற்றப் போகிறார்கள்.
மேலும்
-
வழிப்பறி வழக்கு 6 பேர் மீது குண்டாஸ்
-
சிவகங்கை அருகே ஆரியபவன் நகரில் தார் ரோடு வசதியின்றி மக்கள் அவதி கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
-
போதைப்பொருள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் இலக்கு; மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு
-
சொல்கிறார்கள்
-
உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி!
-
நேபாள வெள்ளத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 700ஐ கடந்தது; 2,498 பேர் மாயம்!