லைட் ரீடிங்... களைகட்டிய கலைத்திருவிழா போட்டிகள் இசை, நடனம், நாடக திறமைகளை வெளிப்படுத்தி பள்ளி மாணவர்கள்

தேனி, ஆக.30–தேனி மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் தனி நபர் பிரிவுகளிலும், குழு நடனம், நாடகம் என பல்வேறு போட்டிகளில் பள்ளி, மாணவ, மாணவியர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை அசர வைத்தனர்.

பள்ளிக்கல்வித்துறையால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் வட்டார, மாவட்ட, மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்துகின்றனர். இன்றைய மாணவர்கள் பெரும்பாலானோர் படிப்பு. அதை விடுத்தால் பொழுது போக்கில் நேரம் செலவிடுவது அலைபேசியில் முழ்குவது என்ற சிந்தனையில் உள்ளனர். ஒவ்வொருவரிடம் ஒரு தனித்திறன் உள்ளது என்பதை அறியாமலே நேரத்தையும், காலத்தையும் சிலர் வீணடிக்கின்றனர். இந்நிலையில் மாணவர்களிடம் பொதிந்துள்ள கலைத்திறன்களை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாக கல்வித்துறையில் நடத்தும் கலைத்திருவிழா போட்டிகள் நடக்கிறது. இதில் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தி அசத்துகின்றனர்.  

ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற திருவிழா:

பள்ளி அளவில் நடைபெறும் போட்டியில் முதலிடம் பிடிப்பவர்கள் வட்டார போட்டிக்கும், வட்டாரத்தில் முதலிடம் பெறுவோர் மாவட்ட போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். தேனி மாவட்டத்தில் 8 வட்டாரங்களிலும் முதலிடம் பிடித்த 9,10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் என ஆயிரம் பேர் வீரபாண்டி சவுராஷ்டிரா கல்லுாரியில் ஆக.,21 முதல் ஆக., 25 வரை மாவட்ட கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்றனர். இதில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தது. இதில் தனி நபர் நடனம், குழு நடனம், இசைக்கருவி மீட்டல், வில்லுபாட்டு, பரதம், நாடகம், கதை சொல்லுதல், ஓவியம், பாட்டு, கோலம், களிமண் சிற்பம், காய்கறி சிற்பங்கள் செதுக்குதல் என மாணவர்கள் தங்கள் திறமைகளை போட்டிபோட்டு வெளிப்படுத்தினர்.  போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் கலைத்திருவிழா பற்றி தினமலர் நாளிதழுடன் மகிழ்சி பொங்க பகிர்ந்து கொண்டனர். 



நடனம் ஆட பிடிக்கும் கனிஷ்கா, எஸ்.ஆர்.ஜி.,உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீரங்காபுரம்.சிறுவயதில் இருந்தே நடமனமாட பிடிக்கும். போட்டிக்காக சில வாரங்களாக பயிற்சி பெற்றோம். எங்கள் குழுவில் 8 பேர் உள்ளோம். பள்ளி முடிந்த பின் தினசரி நடன பயிற்சி பெற்றோம். மாவட்ட போட்டியில் பங்கேற்ற 5 நாட்கள் கடுமையான பயிற்சி எடுத்தோம். கடந்த ஆண்டும் நடன போட்டியில் பங்கேற்றேன். இந்தாண்டு மாவட்ட போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.



படிப்பிலும், நடிப்பிலும் தக்ஷன், அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, அன்னஞ்சி.குழு நாடகத்தில் நண்பர்களுடன் இணைந்து நடித்துள்ளேன். படிப்பின் அவசியம், அதனால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி நாடகத்தில் விளக்கினோம். பாடங்களில் நல்ல மதிப்பெண் எடுப்பேன். எனக்கு படிப்பும், நடிப்பதும் பிடிக்கும். உரையாடல் இன்றி ‘மைம்’ பேசாமல் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். படிப்பில் மட்டும் முழ்கி விடாமல் இதுபோன்ற நிகழ்ச்சிகள் உற்சாகம் அளிக்கிறது.



இசை எனது விருப்பம்

ஸ்ரீநாத், வி.எம்., அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்.சிறுவயதில் இருந்து கீபோர்டு வாசிக்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருந்தது. ஆனால், எங்கள் பகுதியில் கீபோர்டு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் இல்லை. அப்போது வயலின் இசைக்க பயிற்சி வழங்குவதாக கூறினார். அங்கு தினமும் சென்றேன். அதன்பின் வயலின் வாசிக்க பயிற்சி பெற்றேன். கடந்த 3 ஆண்டுகளாக வயலின் பயிற்சி பெறுகிறேன். விடுமுறையில் விளையாட செல்ல மாட்டேன், அலைபேசி அதிகம் பயன்படுத்த மாட்டேன். வயலின் இசைப்பதே எனது ‘ஹாபி’



என் பாட்டு வில்லுப்பாட்டு அர்ச்சனா, அரசு உயர்நிலைப்பள்ளி, ராசிங்காபுரம்.சிறுவயது முதல் சினிமா பாடல்கள் நன்றாக பாடுவேன். பள்ளியில் வில்லுப்பாட்டு போட்டியில் பங்கேற்க கூறினார்கள். நானும், எனது தோழிகளுடன் நன்றாக பாடினோம். எங்கள் ஆசிரியை தினசரி பயிற்சி வழங்குவார். எங்கள் குழுவினர் இளைஞர் திறன் என்ற தலைப்பில் வில்லுப்பாட்டு போட்டியில் பங்கேற்றோம்.



எண்ணத்தை பிரதிபலிக்கும் கோலம்ஆர்.அபிநிஷா, அரசு மேல்நிலைப்பள்ளி, கடமலைக்குண்டு.எனது அம்மா வீட்டின் முன் கோலமிடும் போது தினமும் அதனை பார்த்து கற்றுக்கொண்டேன். இப்போது வீட்டில் நான்தான் கோலமிடுகிறேன். நமது எண்ணங்களை கோலமாக காட்சிப்படுத்தலாம். பள்ளி அளவில் முதலிடம் பெற்று மாவட்ட போட்டிக்கு வந்துள்ளேன். எனது தோழிகள் சிலரும் கோலமிடும் பற்றி கேட்பார்கள். அவர்களுக்கும் எவ்வாறு கோலமிடுவது என கற்றுக்கொடுப்பேன். கடந்தாண்டும் கோலமிடும் போட்டியில் வட்டார அளவிலான போட்டி வரை பங்கேற்றேன்.



கலைநயமிக்க சிற்பம் வடிக்க முயற்சிக்கிறேன்

ஆர்.சுர்ஜித், அரசு உயர்நிலைப்பள்ளி, ராசிங்காபுரம்.யூடியூப் பார்த்து களிமண் சிற்பம் செய்ய கற்றுக்கொண்டேன். இரு ஆண்டுகளாக களிமண் சிற்பம் செய்ய பயிற்சி எடுத்து வருகிறேன். மான், முயல், மரம், இயற்கை காட்சி உள்ளிட்டவற்றை களிமண் மூலம் செய்வேன். சிற்பங்களை கலைநயமிக்கவையாக உருவாக்க வேண்டும் என பயிற்சி பெறுகிறேன். என்றார்.

Advertisement